விற்பனையில் ஹூண்டாய் வெர்னாவை வீழ்த்திய புதிய ஹோண்டா சிட்டி!
மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் வெர்னாவை வீழ்த்தி விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது புதிய ஹோண்டா சிட்டி கார்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை மிட்சைஸ் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி நம்பர்-1 ஆக இருந்தது. ஆனால், புளூயிடிக் டிசைனில் வந்த ஹூண்டாய் வெர்னா, நிசான் சன்னி போன்ற புதிய மாடல்கள் வரவால் ஹோண்டா சிட்டி பின்னுக்குத் தள்ளப்பட்டது.

மேலும், பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாலும், விற்பனையில் பின்தங்கியது. இந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு வந்த புதிய ஹோண்டா சிட்டி பெட்ரோல் மட்டுமின்றி டீசல் மாடலிலும் வந்தது.
இதனால், புதிய ஹோண்டா சிட்டி கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. மிட்சைஸ் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருந்த வெர்னாவை வெகு எளிதாக பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.
கடந்த ஜனவரியில் 7,184 சிட்டி கார்களும், பிப்ரவரியில் 7,213 சிட்டி கார்களும் விற்பனையாகியுள்ளன. அதேசமயம், வெர்னாவை பொறுத்தவரையில், ஜனவரியில் 3,803 கார்களும், பிப்ரவரியில் 3,342 கார்களும் விற்பனையாகியுள்ளன.
கடந்த இரு மாத நிலவரத்தின்படி, புதிய சிட்டி கார் விற்பனையில் யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளது. இதே விற்பனை வரும் மாதங்களிலும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








