இந்தியாவுக்கு எப்போது வருகிறது புதிய ஹோண்டா ஜாஸ்?
ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தடம் பதித்துவிட்ட புதிய ஹோண்டா ஜாஸ் கார் எப்போது இந்தியா வரும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. டிசைனில் முற்றிலும் மாற்றம் கண்டிருப்பதுடன், அங்கங்களில் வளைவு, நெளிவுகளுடன் பார்க்கவும் அட்டகாசமாக இருக்கிறது. இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
ஜப்பான் மார்க்கெட்டில் ஹிட்டடித்த கையோடு தாய்லாந்து உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கும் வந்துவிட்டது. ஆனால், இந்தியாவில் இந்த புதிய கார் வருகை குறித்த அறிகுறி இல்லாமல் இருந்து வருகிறது. மேலும், இந்தியாவில் டீசல் மாடலிலும் வருவதால் பல வாடிக்கையாளர்கள் தங்களது காரை மாற்றாமல் இந்த புதிய காருக்காக காத்திருக்கின்றனர்.

எஞ்சின் ஆப்ஷன்
தற்போது 1.2 லிட்டர் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் கொண்டதாகவும், ஹைபிரிட் மாடலிலும் கிடைக்கிறது. ஆனால், இந்தியா வரும்போது முந்தைய மாடலில் செயல்புரிந்த அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாகவும், டீசல் மாடலிலும் வருகிறது.

டீசல் மாடல்
அமேஸ், சிட்டி கார்களில் செயல்புரியும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை ஜாஸ் காரிலும் பொருத்தி இந்தியாவில் வெளியிட ஹோண்டா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, அமேஸ், சிட்டி கார்களின் டீசல் மாடல்கள் விற்பனையில் பெரும் வெற்றியை ருசித்துள்ள நிலையில், புதிய ஜாஸ் காரின் டீசல் மாடலும் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.

சிறப்பம்சங்கள்
இந்த கார் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்படுவதால் மிகச்சிறப்பான வசதிகளை கொண்டிருக்கும். கருப்பு நிறத்திலான இன்டிரியரும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும். ஸ்டார்ட்- ஸ்டாப் வசதியும் கொண்டிருக்கும். ஏபிஎஸ், ஃபோர்ஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி கன்ச்ரோல், 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது.

விலை
இது பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டிற்கான கார் என்பதால் விலை சற்று கூடுதலாகவே இருக்கும். ஆனால், முந்தைய ஜாஸ் கார் அளவுக்கு மிக அதிகமாக இருக்காது என்று ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

விற்பனை?
அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் இந்த புதிய தலைமுறை ஜாஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








