இந்தியாவுக்கு ஐஎக்ஸ்25 காம்பேக்ட் எஸ்யூவி: ஹூண்டாய் உறுதிப்படுத்தியது
இந்தியாவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்வதை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும், விற்பனையை அதிகரிப்பதற்கும் புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், விரைவில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
சீனாவில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் ஐஎக்ஸ்25 எஸ்யூவி மாடல்தான் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய மாடல் 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டதாக இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் வர இருக்கிறது.
ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுடன் நேரடியாக போட்டி போடும். 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட மாடல் என்பதால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்று வரிச்சலுகை பெற முடியாது. அதேநேரத்தில், இந்த எஸ்யூவிக்கு 90 சதவீத பாகங்களை இந்தியாவிலேயே பெறுவதற்கு ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், போட்டியாளர்களுக்கு மிகச் சவாலான விலையில் இந்த புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வர முடியும் என்று ஹூண்டாய் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








