இந்தியாவில் 2வது கார் ஆலை அமைக்க ஹூண்டாய் திட்டம்
மாருதி நிறுவனத்துக்கு அடுத்ததாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார்ஸ் விளங்குகிறது. இந்தநிலையில், ஹோண்டா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களால் ஹூண்டாயின் ஆஸ்தான 2வது இடத்துக்கு ஆபத்து நெருங்கி வருகிறது.
இந்த நெருக்கடியை தவிர்க்கும் விதமாக ஆண்டுக்கு 3 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுவரை இல்லாத செக்மென்ட்டுகளில் களம் இறங்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் உயரதிகாரி சமீபத்தில் தெரிவித்தார்.

அதன்படி, புதிய காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், புதிய மாடல்களின் வருகையையொட்டி, இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை தவிர்க்கவும் ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 6.8 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சென்னை ஆலையில் உற்பத்தியாகும் கார்கள் அனைத்தையும் உள்நாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும், புதிய மாடல்களை உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக இந்தியாவில் 2வது கார் ஆலையை அமைக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. சென்னையை ஆலையை விரிவாக்கம் செய்வதை தவிர்த்துவிட்டு, வேறு இடத்தில் புதிய ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளதாம். டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு, மாருதி உள்ளிட்ட நிறுவனங்களின் வரிசையில் புதிய கார் ஆலையை குஜராத் மாநிலத்தில் நிறுவுவது குறித்து அந்த நிறுவனம் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








