2016 வரை இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயத்துக்கு வாய்ப்பில்லை: எக்லிஸ்டோன் தகவல்
வரும் 2016ம் ஆண்டு வரை இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்று ஃபார்முலா- 1 அமைப்பின் தலைவர் பெர்னி எக்லிஸ்டோன் தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் தர கார் பந்தயமாக கூறப்படும் ஃபார்முலா- 1 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஃபார்முலா- 1 கார் பந்தயத்தை, பொழுதுபோக்கு விளையாட்டாக மத்திய அரசு வகைப்படுத்தியுள்ளது.

இதனால், இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயங்களை நடத்துவதற்கு அதிக அளவில் வரி கட்ட வேண்டியிருக்கிறது. மேலும், ஃபார்முலா- 1 கார்களை இந்தியாவுக்குள் எடுத்து வருவதற்கும், இறக்குமதி கார்களுக்கு இணையான வரி வசூலிக்கப்படுகிறது.
இந்த பிரச்னையால் இந்த ஆண்டு இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த பிரச்னையில் சுமூக தீர்வு எட்டப்படும் வரை இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயங்களை நடத்த இயலாது என்றும் ஃபார்முலா- 1 கார் பந்தயத்தை நடத்தும் சர்வதேச அமைப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதனால், அடுத்த ஆண்டும் இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் நடைபெறுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. வரிக் கொள்கையில் மத்திய அரசு மாற்றங்கள் செய்தால் மட்டுமே இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா- 1 கார் பந்தயங்கள் நடக்க வாய்ப்பு உருவாகும்.
இந்த அறிவிப்பு கார் பந்தய ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








