ஜாகுவார் காரை கழுதைகளை கட்டி இழுத்த குஜராத் தொழிலதிபர்!
அடிக்கடி ரிப்பேரான காரை சரிசெய்து தராத டீலருக்கு பாடம் புகட்டுவதற்காக, ஜாகுவார் காரை அதன் உரிமையாளர்கள் கழுதைகளை பூட்டி இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் ராகுல் தக்கார். ஜாகுவார் கார் மீது பேராவல் கொண்ட இவர் 50 லட்ச ரூபாய் மதிப்புடைய வெள்ளை நிற ஜாகுவார் எக்ஸ்எஃப் காரை வாங்கினார். ஆனால், அந்த சந்தோஷம் சில மாதங்கள்தான் நீடித்தது. அந்த காரின் ஹெட்லைட், பம்பர், எஞ்சின் போன்றவைகளில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
இதையடுத்து, கார் வாங்கிய கார்கோ டீலர்ஷிப்பின் சர்வீஸ் மையத்துக்கு எடுத்துச் சென்றார். ஆனால், அங்கு பிரச்னை முழுமையாக சரிசெய்து கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால், கோபமடைந்த அவர் அந்த காரை கழுதைகளை கட்டி டீலர்ஷிப்புக்கு இழுத்துச் சென்றார்.

கழுதை தேவலாம்
தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த காருக்கு கழுதை தேவலாம் என்ற ரீதியில் வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டியிருந்தார்.

வைக்கோல் கட்டுகள்
காரின் மீது சிறிய வைக்கோல் கட்டு பொதிகளை போட்டும் கழுதைகளை விட்டு இழுக்கச் செய்தார்.

பரபரப்பு
8 கழுதைகளை பூட்டி காரை இழுக்கச் செய்தார். இதனால், அந்த டீலர்ஷிப் அமைந்துள்ள பகுதியில் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டீலர் மவுனம்
இந்த சம்பவம் குறித்து டீலர்ஷிப்பிலிருந்து எந்த பதிலும் தராமல் மவுனம் காத்தனர்.

ஜாகுவார் விளக்கம்
உலக அளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கி வருகிறோம். சம்பந்தப்பட்ட காரின் பிரச்னையை கூடிய விரைவில் சரிசெய்து கொடுக்கப்படும். இதுதொடர்பாக, அந்த வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளோம்," என்று ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.

முதல் சம்பவம் இல்லை
குஜராத் மாநிலத்தில் இது புதிது இல்லை. கடந்த ஆண்டு ரிப்பேரை சரிசெய்யாத கோபத்தில் வதோதராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது பென்ஸ் காரை 6 கழுதைகளை பூட்டி தெரு தெருவாக இழுத்து சென்றது நினைவிருக்கலாம்.

எங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








