இந்தியாவில் ஜாகுவாரின் முதல் எஸ்யூவியின் தரிசனம்!!
லேண்ட்ரோவர் நிறுவனம் எஸ்யூவி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜாகுவாருக்கு எஸ்யூவி தயாரிப்பின் மீது கவனம் செலுத்த தேவையில்லை என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், மாறி வரும் மார்க்கெட் சூழலில் எஸ்யூவி மாடல் கட்டாயம் தேவை என்பதை ஜாகுவார் உணர்ந்துவிட்டது.
இதற்காக, சிஎக்ஸ்17 என்ற பெயரில் புதிய எஸ்யூவி கான்செப்ட்டை கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் ஜாகுவார் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த புதிய ஜாகுவார் எஸ்யூவி இந்திய பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தது.

வர்ண ஜாலம்
தங்க நிற பெயிண்ட்டில் தகதகத்தை ஜாகுவார் எஸ்யூவி கான்செப்ட்டின் கம்பீரமும், டிசைன் நயமும் காண்போரை மெய்மறக்க வைத்தது.

வடிவம்
ஜாகுவார் சிஎக்ஸ் 17 எஸ்யூவி 4,718 மிமீ நீளமும், 1,959 மிமீ அகலமும், 1,649 மிமி உயரமும் கொண்டதாகவும், 2,905 மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 213 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உடையதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாட்ஃபார்ம்
இந்த புதிய எஸ்யூவி ஜாகுவாரின் ஐக்யூ பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதிக அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்படுவதால் இலகு எடை கொண்டதாகவும், வடிவமைப்பு செலவீனம் குறைவாகவும் இருக்கும்.

தயாரிப்பு நிலை மாடல்
அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2016ம் ஆண்டு துவக்கத்தில் ஜாகுவார் சிஎக்ஸ்17 கான்செப்ட் தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

எஞ்சின்
4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் இந்த புதிய கிராஸ்ஓவர் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் உருவாக்கி வரும் புத்தம் புதிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் இந்த கார்களில் பொருத்தப்பட உள்ளன. பெட்ரோல் மாடலில் 240 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

பெயர்
சிஎக்ஸ்17 என்ற கான்செப்ட் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வரும்போது க்யூ டைப் மற்றும் எக்ஸ்க்யூ டைப் ஆகிய பெயர்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு பெயர்களுக்கும் ஜாகுவார் காப்புரிமை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








