ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் இறங்கும் கான் டிசைன்ஸ் நிறுவனம்!
ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் கால் பதிக்க இருப்பதாக இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கார் கஸ்டமைஸ் நிறுவனமான கான் டிசைன்ஸ் அறிவித்துள்ளது.
விலையுயர்ந்த கார்களை கஸ்டமைஸ் செய்வதில் கான் டிசைன்ஸ் நிறுவனம் உலக அளவில் பிரபலமாக விளங்குகிறது. ரோல்ஸ்ராய்ஸ், லேண்ட்ரோவர் என விலையுயர்ந்த கார்களை கஸ்டமைஸ் செய்வதில் இந்த நிறுவனம் புகழ்பெற்றது.

லேண்ட்ரோவர்
அனைத்து விலையுயர்ந்த கார்களையும் கஸ்டமைஸ் செய்வதில் கைதேர்ந்தது கான் டிசைன்ஸ். குறிப்பாக, லேண்ட்ரோவர் கார்களை மிக சிறப்பாக கஸ்டமைஸ் செய்து விற்பனை செய்து வருகிறது.

புதிய மாடல்கள்
பழமையும், பாரம்பரியமும் கலந்த டிசைனில் பார்கெட்டா என்ற 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் கார் மாடலையும், அடுத்த ஆண்டு அஸ்டன் மார்ட்டின் டிபிஆர்-1 அடிப்படையிலான புதிய கார் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

பழமை போற்றும் டிசைன்
இந்த புதிய கார் மாடல்கள் இங்கிலாந்து ஆட்டோமொபைல் துறையின் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத் திறனையும் மேலே ஒரு படி கொண்டு செல்வதாக இருக்கும் என கான் டிசைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அப்சல் கான் தெரிவித்துள்ளார்.

கூட்டு தயாரிப்பு
இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிப்பதற்காக கான் டிசைன் நிறுவனமும், ஆன்ட் மோட்டார்ஸ் நிறுவனமும் கைகோர்த்துள்ளன. புதிய கார்களின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களை கான் டிசைன்ஸ் வழங்கும். ஆன்ட் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்ளும். மேலும், புதிய கார்கள் கான் மற்றும் ஆன்ட் நிறுவனங்களின் கூட்டணி பெயரில் வெளியாகும்.

அறிமுகம்
ஓபன்டாப் கொண்ட 2 சீட்டர் ஸ்போர்ட்ஸ் சீட்டர் காரை முதலாவதாக கான் டிசைன்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஸ்பீட்ஸ்டெர் ரகத்தில் வரும் இந்த புதிய கார் மாடல் வரும் செப்டம்பர் 12ந் தேதி குட்வுட் ஆட்டோமொபைல் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கஸ்டமைஸ் பணிகள்
ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் இறங்கினாலும், தொடர்ந்து கார் கஸ்டமைஸ் செய்யும் பணிகளும் தொடரும் என்று கான் டிசைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








