செப்டம்பரில் இந்தியாவில் ரிலீசாகும் லம்போ ஹூராகென் சூப்பர் கார்!
வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. ஜெனீவா மோட்டார் ஷோவில் சமீபத்தில் இந்த கார் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது.
லம்போர்கினி நிறுவனத்துக்கு பேரும் புகழையும் பெற்றுத் தந்த கல்லார்டோ காரின் வாரிசாக வருகிறது இந்த புத்தம் புதிய கார். இந்த காரின் எஞ்சின் ஆற்றலை குறிக்கும் வகையிலேயே, லம்போர்கினி ஹூராகென் எல்பி610- 4 என்ற பெயரிடப்பட்டிருக்கிறது.

சாதனை
கல்லார்டோ போன்றே விற்பனையில் இந்த புதிய லம்போர்கினி காரும் சாதிக்கும் என்று கூறலாம். ஏனெனில், இந்த புதிய சூப்பர் கார் இதுவரை 1,000 முன்பதிவுகளை பெற்று விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக ஒரு ஹூராகென் கார் வந்திறங்கியுள்ளது.

டிசைன்
பார்த்தவுடன் லம்போர்கினி கார் என்று கூறிவிடுவதற்கான டிசைன் அம்சங்கள் உள்ளன. அத்தோடு, கூர்மையான முனைகள், அதிவேக காருக்குண்டான தாழ்வான அமைப்பை கொண்டுள்ளது. புதிதாக சில டிசைன் விஷயங்களும் கையாளப்பட்டிருக்கின்றன.

சேஸீ
கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியத்தில் இந்த காரின் சேஸீ உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால், வெகுவாக எடை குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் 1,422 கிலோ எடை கொண்டது. இதன்மூலம், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் சிறப்புடன் வருகை தந்துள்ளது.

எஞ்சின்
இந்த காரில் 610 எச்பி ஆற்றலையும், 560 என்எம் டார்க்கையும் அளிக்கும் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்
எஞ்சின் சக்தி 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழியாக அனைத்து வீல்களுக்கும் கடத்தப்படுகிறது. 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் தொட்டுவிடும் என்பதோடு, அதிகபட்சம் மணிக்கு 325 கிமீ வேகம் வரை செல்லும் கட்டமைப்பை கொண்டது.

இன்டிரியர்
12.3 இஞ்ச் கலர் டிஸ்ப்ளே, அவென்டேடார் காரில் இருப்பது போன்ற இக்னிஷன் பட்டன், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் போன்ற அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கிறது.

விலை
இந்தியாவில் லம்போர்கினி ஹூராகென் எல்பி-610 -4 கார் ரூ.3.5 கோடி விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








