ரூ.4,000 கோடி முதலீட்டில் தமிழகத்தில் புதிய கார் ஆலை அமைக்கும் மஹிந்திரா!
ரூ.4,000 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மிகப்பிரம்மாண்டமான கார் ஆலையை மஹிந்திரா நிறுவனம் அமைக்க உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் இந்த புதிய கார் ஆலை அமைக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் இந்த புதிய கார் ஆலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் மஹிந்திராவின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி இந்த புதிய வாகன தயாரிப்பு ஆலையில்தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதுதவிர, இன்னும் இரண்டு புதிய மாடல்களும் இந்த ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. அதன் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

தேர்தல் விதிமுறை
இந்த புதிய கார் ஆலை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்வதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளை மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. வரும் ஜூன் மாதம் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தற்போது இந்த புதிய ஆலை குறித்த அறிவிப்பு தள்ளிப்போடப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட ஆலை
அடுத்த 2 ஆண்டுகளில் வாகன தயாரிப்பு துறையில் ரூ.10,000 கோடியை முதலீடு செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைய இருக்கும் புதிய கார் ஆலைக்காக ரூ.4,000 கோடியை 7 ஆண்டுகளில் முதலீடு செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

உற்பத்தி எப்போது?
அடுத்த ஆண்டு இந்த புதிய வாகன ஆலையில் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்101 எஸ்யூவி
எஸ்101 என்ற குறியீட்டுப் பெயரில் மஹிந்திரா நிறுவனம் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. ரூ.5 லட்சத்தில் வரும் இந்த புதிய எஸ்யூவி மாடல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எஸ்யூவி தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதர மாடல்கள்
இந்த புதிய ஆலையில் எஸ்101 காம்பெக்ட் எஸ்யூவியை தவிர்த்து, யு301 என்ற புதிய மிட்சைஸ் எஸ்யூவி மற்றும் மேக்ஸிமோவுக்கு மாற்றாக பி601 என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் புதிய இலகு ரக வர்த்தக வாகனங்கள் இந்த புதிய ஆலையில் உற்பத்தி செய்ய மஹிந்திரா திட்டமிட்டிருக்கிறது.

9வது ஆலை
தமிழகத்தில் அமைக்கப்படும் புதிய கார் ஆலை மஹிந்திராவின் 9வது வாகன தயாரிப்பு ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மஹிந்திராவின் 8 வாகன தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவைவிட்டு இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் மஹிந்திராவின் வாகன தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








