மாருதி செலிரியோவின் கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் எவ்வாறு செயல்படுகிறது?
அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள மாருதி செலிரியோ காரில் 'கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன்' என்ற புதிய வகை டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. செலிரியோவுக்கு முன்பதிவு துவங்கப்பட்டு விட்ட நிலையில், இந்த கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன்தான் வாடிக்கையாளர்களிடம் அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்கெட்டில் குறைந்த விலை செமி ஆட்டோமேட்டிக் காராக வர இருக்கும் இந்த புதிய கார் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய செமி ஆட்டோமேட்டிக் காரின் டிரான்ஸ்மிஷன் செயல்படும் விதம் குறித்து ஆட்டோமொபைல் துறையில் விவரிக்கப்படும் கருத்துக்களையும், இதன் சாதகங்களாக கூறப்படும் அம்சங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ஈஸி டிரைவ்
புதிய செமி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷநனை ஈஸி டிரைவ் என்ற பெயரில் வணிக ரீதியில் அழைக்கிறது மாருதி. இது போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புற பயன்பாட்டுக்கு சிறந்த காராக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், சிறந்த ஓட்டுதல் அனுபவத்தை கொடுக்கும்.

கியர் பாக்ஸ்
மாருதி செலிரியோ கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும். மேனுவலாக கியர்களை மாற்றும்போது ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கிளட்ச் பிடிப்பது மற்றும் ரிலீசாகும். ப்ளஸ் மற்றும் மைனஸ் என்ற அடிப்படையில் மேனுவலாக கியர்களை கூட்டி, குறைக்க வேண்டும். இதனை முழுமையான ஆட்டோமேட்டிக் கார் போன்றும் இயக்கும் வசதியும் இருக்கும் என்று தெரிகிறது.

கிளட்ச் பெடல் இருக்காது
கிளட்ச் பெடல் இல்லையென்றாலும், பிற மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை போன்று கிளட்ச் இயக்கம் திரை மறைவில் நடைபெறும். மேனுவலாக கியரை மாற்றும் வசதி கொண்ட இந்த காரின் கிளட்ச் அமைப்பின் நகர்வுகளை சிறிய கம்ப்யூட்டர் கட்டுப்படுத்தும். அதாவது, காலைக் கொண்டு கிளட்சை கட்டுப்படுத்தும் வேலையை ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தின் மூலம், இந்த சிறிய கம்ப்யூட்டர் கட்டுப்படுத்தும்.

ஆக்சிலரேசன்
ஒவ்வொரு கியருக்கு தகுந்தவாறு எஞ்சின் சுழல் வேகம் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், ஒவ்வொரு கியருக்கு தகுந்தவாறு காரின் வேகத்தை கூட்டவோ அல்லது குறைக்கும் வகையில் இந்த செமி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் செயல்படும்.

தயாரிப்பு செலவு
சாதாரண மேனுவல் டிரான்ஸ்மிஷன் அமைப்புடன் ஹைட்ராலிக் நுட்பம் மற்றும் சிறிய கம்ப்யூட்டரை சேர்த்து இந்த புதிய டிரான்ஸ்மிஷன் அமைப்பை மாருதி வடிவமைத்துள்ளது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன்களில் பயன்படுத்தப்படும் டார்க் கன்வெர்ட்டரைவிட இந்த டிரான்ஸ்மிஷனில் சேர்க்கப்பட்டிருக்கும் கிளட்ச்சுக்கான ஹைட்ராலிக் அமைப்பு மற்றும் சிறிய கம்ப்யூட்டருக்கான தயாரிப்பு செலவீனம் குறைவு. இதன்மூலம், காரின் விலையையும் மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பு மாருதிக்கு கிட்டியிருக்கிறது.

மைலேஜ்
இந்த புதிய கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அமைப்பின் மற்றொரு கூடுதல் அம்சமாக கூறப்படுவது மைலேஜ். சாதாரணமாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களைவிட ஆட்டோமேட்டிக் கார்களின் மைலேஜ் குறைவாக இருக்கும். ஆனால், மாருதி செலிரியோவின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மோடுகளில் இயங்கும்போது 23.1 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது.

விலை
இந்த புதிய கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலிந் வெற்றி, அதன் விலையை பொறுத்தே தீர்மானிக்கப்படும். அதேவேளை, மாருதி நிறுவனம் விலை நிர்ணயத்தில் கில்லாடி. எனவே, செலிரியோவின் இந்த புதிய கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த புதிய கிளட்ச்லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன் இயங்கும் விதம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில்தான் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட உள்ளது. அப்போது, இந்த புதிய டிரான்ஸ்மிஷன் இயங்கும் விதம் குறித்த முழுமையான தகவல்களை வழங்குகிறோம்.


Click it and Unblock the Notifications








