அடுத்த மாதம் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் வருகிறது புதிய ஆல்ட்டோ கே10 கார்!
அடுத்த மாதம் புதிய மாருதி ஆல்ட்டோ கே10 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஆல்ட்டோ 800 காரின் டிசைனில் சிறிய மாற்றங்களை செய்து புதிய ஆல்ட்டோ கே10 மாடலாக மாருதி வெளியிட உள்ளது.
இந்த காரின் மிக குறிப்பிடத்தக்க அம்சமாக எதிர்பார்க்ப்படுவது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்ற புதிய வகை கியர்பாக்ஸ்தான். செலிரியோ காரில் ஏற்கனவே வந்துவிட்ட இந்த புதிய கியர்பாக்ஸ் தற்போது புதிய ஆல்ட்டோ கே10 காரிலும் இடம்பெற உள்ளது.

மேலும், இந்தியாவின் மிகக் குறைவான விலை ஆட்டோமேட்டிக் மாடலாகவும் இது வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த கார் மைலேஜிலும் குறை வைக்காது என்பதால், பட்ஜெட் விலை கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கும், முதல்முறை கார் வாங்குபவர்களையும் எளிதாக ஈர்க்கும் வாய்ப்பு இருக்கிறது.
இதுகுறித்து மாருதி அதிகாரி ஆர்எஸ்.கல்சி கூறுகையில்," புதிய ஆல்ட்டோ கே10 கார் மிக முக்கியமான மாடல். இந்த செக்மென்ட்டில் கார் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் அதிகம் எதிர்ப்பார்ப்புகள் உள்ளன. பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த மாடலாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது சவால் நிறைந்தது. எனவே, சிறந்த மதிப்புடைய மாடலை கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். அந்த வகையில், ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. சிறந்த எரிபொருள் சிக்கனம், அதேநேரத்தில் குறைவான விலை போன்ற காரணங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதாக இருக்கிறது," என்று கூறினார்.
கடந்த 2010ம் ஆண்டு ஆல்ட்டோ கே10 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுவரை 4.3 லட்சம் ஆல்ட்டோ கே10 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது ரூ.3.15 லட்சம் முதல் ரூ.3.31 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








