அடுத்த ஆண்டு இந்தியா வருகிறதா 7 சீட்டர் வேகன் ஆர்?!
கடந்த ஆண்டு இந்தோனேஷியாவில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில் யாரும் எதிர்பாராத விதமாக 7 சீட்டர் வேகன் ஆர் காரை மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி பார்வைக்கு வைத்திருந்தது. சாதாரண வேகன் ஆர் காரின் பின்புறத்தை சிறிது நீட்டித்து எம்பிவி காராக டிசைன் செய்யப்பட்டிருந்த இந்த புதிய மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு கான்செப்ட் நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்த காரை இந்த ஆண்டு இறுதியில் உற்பத்திக்கு கொண்டு செல்ல சுஸுகியின் இந்தோனேஷிய பிரிவு முடிவு செய்துள்ளது.
டட்சன் பிராண்டில் வரும் கோ ப்ளஸ் காரால் ஏற்பட இருக்கும் நெருக்கடியை தீர்த்துக் கொள்ளவே இந்த புதிய மாடலை அங்கு சுஸுகி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டட்சன் கோ ப்ளஸ் கார் இந்தோனேஷிய மார்க்கெட்டை தொடர்ந்து, அடுத்த ஆண்டு நம் நாட்டு மார்க்கெட்டிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. எனவே, சுஸுகி நிறுவனமும் இந்தோனேஷிய மார்க்கெட்டை தொடர்ந்து இந்திய மார்க்கெட்டிலும் 7 சீட்டர் வேகன் ஆர் காரை மாருதி பிராண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேட்டீங்களா விலையில்...
தற்போது மாருதி எர்டிகா மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பட்ஜெட் போடும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கார் சிறப்பான தேர்வாக இருக்கிறது. ஆனால், இந்த மார்க்கெட்டை உடைக்கும் விதததில் ரூ.5 லட்சத்திற்குள் டட்சன் கோ ப்ளஸ் கார் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, மார்க்கெட் பங்களிப்பை இழப்பதை தவிர்ப்பதற்காக ரூ.5 லட்சம் விலையில் புதிய 7 சீட்டர் வேகன் ஆர் கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஈக்கோ பிரயோஜனமில்லை
தற்போது மாருதியிடம் பட்ஜெட் விலையிலான ஈக்கோ என்ற 7 சீட்டர் எம்பிவி கார் இருந்தாலும், இது டட்சன் கோ ப்ளஸ் காருக்கு போட்டியை கொடுக்க இயலாது என்பதை மாருதி உணர்ந்து கொண்டுவிட்டது. 7 சீட்டர் வேகன் ஆர் மூலமாகவே இந்த நெருக்கடியை போக்க விரும்புகிறது.

4 மீட்டர் எம்பிவி
டட்சன் கோ ப்ளஸ் கார் போன்றே இந்த புதிய மாடலும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொண்டதாக இருக்கும். பின் இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே அமரும் வசதி இருக்கும்.

எஞ்சின்
இந்த 7 சீட்டர் காரில் சாதாரண வேகன் ஆர் மாடலில் இருக்கும் அதே 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினே பொருத்தப்பட்டிருக்கும். ஈக்கோ காரில் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்த காரில் 1.0 லிட்டர் எஞ்சின்தான் இருக்கும்.

வெற்றி பெறுமா?
இந்திய மார்க்கெட்டில் வேகன் ஆர் பிராண்டுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. இந்த நிலையில், ரூ.6 லட்சத்திற்குள் ஒரு 7 சீட்டர் காரை கொடுத்தால் நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்கள் பெரிய வரவேற்பு தருவார்கள் என்று கருதலாம்.
Images Source:Kompas otomotif


Click it and Unblock the Notifications








