ஏஎம்டி கியர்பாக்ஸுடன் மாருதி வேகன் ஆர் கார்... ஆனால்...?!
செலிரியோ, ஆல்ட்டோ கே10 கார்களின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து வேகன் ஆர் காரிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலை மாருதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்காலத்தில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மாருதி ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அடுத்து வேகன் ஆர் ஸ்டிங்ரே மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது இத்தாலியை சேர்ந்த மேக்னட்டி மரெல்லி நிறுவனத்திடமிருந்து ஏஎம்டி கியர்பாக்ஸ் சப்ளையை மாருதி பெற்று வருகிறது. மாதத்திற்கு 3,500 ஏஎம்டி கியர்பாக்ஸ்கள் சப்ளை பெறப்படுகிறது. இந்த நிலையில், செலிரியோ, ஆல்ட்டோ கே10 கார்களின் ஏஎம்டி மாடல்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளதையடுத்து, ஏஎம்டி கியர்பாக்ஸ் சப்ளையை கூடுதலாக பெற மாருதி முயற்சி மேற்கொண்டுள்ளது
இதன்படி, மாதத்திற்கு 5,000 ஏஎம்டி கியர்பாக்ஸ்களை சப்ளை பெற மாருதி முடிவு செய்துள்ளது. ஏஎம்டி கியர்பாக்ஸ் சப்ளை பிரச்னை தீர்ந்துவிட்டால், செலிரியோ, ஆல்ட்டோ கே10 கார்களுக்கான காத்திருப்பு காலம் குறையும் என்பதோடு, வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஏஎம்டி மாடலையும் விற்பனைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.
மாருதி வேகன் ஆர் ஸ்டிங்ரே காரின் ஏஎம்டி மாடல் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகன் ஆர் காரின் சாதாரண மாடலில் ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டால், அது நிச்சயம் பெரிய வெற்றியை கொடுக்கும். ஆனால், வேகன் ஆர் ஸ்டிங்ரே காரில் ஏஎம்டி மாடலில் வரும்போது அது எதிர்பார்த்த அளவு விற்பனையை பதிவு செய்யுமா என்பது சந்தேகத்திற்கிடமானதாகவே கூறலாம்.


Click it and Unblock the Notifications








