1.5 லட்சம் டிசையர்களை திரும்ப அழைக்க மாருதி முடிவு!
குறைபாடு உள்ள உதிரிபாகத்தை மாற்றித் தருவதற்காக 1.5 லட்சம் டிசையர்களை மாருதி திரும்ப அழைக்கிறது.
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் டிசையர் இரண்டாம் இடத்தில் உள்ளது. வாடிக்கையாளர்களிடம் அதிக நம்பகத்தன்மையை பெற்ற கார் மாடல் என்ற பெருமையும் டிசையருக்கு உண்டு.

இந்த நிலையில், ஸ்டீயரிங் காலம்ன் பகுதியில் இருந்த பிரச்னையை சரி செய்வதற்காக, கடந்த ஆண்டு டிசையர் உள்பட தனது சில கார் மாடல்களை மாருதி திரும்ப அழைத்தது. இதைத்தொடர்ந்து, மீண்டும் அதிக எண்ணிக்கையிலான டிசையர் கார்களை மாருதி திரும்ப அழைக்க உள்ளது. இப்போது வேறு பிரச்னை.
பெட்ரோல் டேங்க் குழாயின் இணைப்பு பாகமான ப்யூவல் ஃபில்லிங் நெக் என்ற பாகத்தில் குறைபாடு உள்ளதை மாருதியின் சப்ளையரான ஜேபிஎம் கண்டறிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, குறைபாடு உள்ள பாகத்தை மாற்றித் தருவதற்காக மாருதி திரும்ப அழைக்க உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு முதல் இதுவரை தயாரிக்கப்பட்ட டிசையர்கள்தான் திரும்ப அழைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாருதி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கார் மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் ஒரு மாடல் திரும்ப அழைக்க இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








