எல்லா விதத்திலும் எலைட் ஐ20 காருடன் மல்லுக்கட்ட வரும் புதிய மாருதி கார்!
எல்லா விதத்திலும் ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஒய்.ஆர்.ஏ., என்ற குறியீட்டுப் பெயரில் தற்போது தீவிர சாலை சோதனைகளில் இருந்து வரும் இந்த புதிய கார் ஸ்விஃப்ட்டைவிட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். மேலும், சிறப்பான இடவசதி கொண்ட காராகவும் இதனை வடிவமைத்துள்ளனர்.

தற்போது சோதனையில் இருக்கும் புரோட்டோடைப் மாடலில் எல்இடி பகல்நேர விளக்குகள், குறைவான தரை இடைவெளியுடன் தாழ்வான வடிவமைப்பு போன்றவை குறிப்பிட்டு கூறலாம். குறிப்பாக, சமீபத்தில் விற்பனைக்கு வந்த சியாஸ் செடான் காரின் டிசைன் அம்சங்கள் சிலவற்றை இந்த கார் கொண்டிருக்கும் என்பதும் கொசுறுத் தகவல்.
இந்த புதிய காரில் 1.0லி கே10சி டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டிருக்கும். இதுவரை கிடைத்த தகவல்களின்படி, டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போசார்ஜர் தொழில்நுட்பம் கொண்ட இந்த புதிய 1.0லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 90 பிஎச்பி பவரையும், 140என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சத்திற்கு இடையிலான விலைப்பட்டியலில் இந்த புதிய மாடல் வரும் என்பது எதிர்பார்ப்பு. சமீபத்தில் விற்பனைக்கு வந்த எலைட் ஐ20கார் மட்டுமின்றி, அடுத்த ஆண்டு வரும் புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் காருக்கும் இது போட்டியாக களமிறங்கும். 2016ம் ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








