பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி செடான் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது
ஏஎம்ஜி பிராண்டில் பல புதிய மாடல்களை இந்தியாவில் தொடர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ் களமிறக்கி வருகிறது. அந்த வரிசையில், தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரின் ஏஎம்ஜி மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ ஏ45 ஏஎம்ஜி பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மாடல் சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கும். உலகின் அதிசக்திவாய்ந்த 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வந்துள்ள இந்த காரின் ஸ்டைலும், பெர்ஃபார்மென்ஸும் வாடிக்கையாளர்களை கிறங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கவர்ச்சிகரமான விலையில் வந்திருக்கும் இந்த காரின் கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

சர்வதேச விருதுகள்
இந்த காரின் எஞ்சின் இரண்டு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. 2014ம் ஆண்டின் சிறந்த எஞ்சின் மற்றும் 1.8 லிட்டர் முதல் 2.0 லிட்டர் வரையிலான எஞ்சின் பிரிவில் சிறப்பான எஞ்சின் என்ற விருதுகளையும் வென்றுள்ளது.

தோற்றம்
ஏஎம்ஜி பாடி கிட்டுடன் மிக அசத்தலாக தோற்றமளிக்கிறது. மேட் பிளாக் அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட், ஸ்பிளிட்டர்கள் உள்ளிட்ட ஏஎம்ஜி பிராண்டு ஆக்சஸெரீஸ்கள் சிஎல்ஏ காருக்கு சிறப்பான தோற்றத்தை வழங்குகிறது. இதுதவிர, இன்னும் பல கஸ்டமைஸ் வசதிகளையும் வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் செய்து கொள்ளலாம்.

பெட்ரோல் எஞ்சின்
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 360 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் ஏஎம்ஜி ஸ்பீடுஷிப்ட் டிரான்ஸ்மிஷன் கொண்டது. ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் பேடில் ஷிப்ட் வசதியும் உள்ளது.

இன்டிரியர்
இந்த காரின் இன்டிரியர் தோற்றம் ஏ கிளாஸ் காரை ஒத்ததாகவே இருக்கிறது. ஆனால், ஏஎம்ஜி.,யின் சில கூடுதல் ஆக்சஸெரீஸ்களால் வேறுபடுத்தப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் ஏஎம்ஜி பேட்ஜ், கார்பன் ஃபைபர் ஃபினிஷ் ஆகியவை முக்கியமானவையாக கூறலாம்.

விலை
இந்த கார் போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் களமிறக்கியுள்ளது. ரூ.68.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த கார் இறக்குமதி மாடலாக விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








