புதிய டாடா கார்களின் வடிவமைப்பின் பின்னணியில் நரேன் கார்த்திகேயன்!
அடுத்த தலைமுறை டாடா கார்களின் வடிவமைப்பில், தமிழகத்தை சேர்ந்த ஃபார்முலா-1 வீரர் நரேன் கார்த்திகேயன் முக்கிய பங்காற்றி வருகிறார்.
போட்டியாளர்களுக்கு முன்னால் டாடா கார்களின் டிசைனும், பிற அம்சங்களும் எடுபடவில்லை. கூவி அழைத்தாலும் சீந்துவாரில்லை. தற்போது மார்க்கெட்டில் மீண்டும் உயிர்த்தெழுவதற்கு நெஞ்சில் வைராக்கியத்துடன் டாடா களமிறங்கியுள்ளது.
இதன்படி, மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க பல புதிய கார் மாடல்களை வரிசை கட்ட இருக்கிறது டாடா மோட்டார்ஸ். அந்த வரிசையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸெஸ்ட், போல்ட் கார்கள் விரைவில் விற்பனைக்கு வரும் தருவாயில் இருக்கின்றன.
இந்த இரு கார்களின் டிசைனும் அனைவரின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அடுத்த தலைமுறை மாடல்களாக வர இருக்கும் புதிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல்களின் வடிவமைப்பில் தமிழகத்தே ஃபார்முலா-1 ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன் மிக நெருக்கமாக இணைந்து செயலாற்றி வருகிறார்.

நெடிய பந்தம்
கடந்த 4 ஆண்டுகளாக புதிய டாடா கார்களின் வடிவமைப்புக்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு நரேன் கார்த்திகேயன் பல முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

முக்கிய பங்கு
மேலும், டாடாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டரர் டிம் லிவர்டனிடம் தன்னுடைய ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை நேரடியாக வழங்கி வருகிறாராம்.

முழு அளவில் ஆலோசனை
கார்களின் நிலைத்தன்மை, பிரேக் செயல்திறன், எரிபொருள் சிக்கனம், இருக்கை அமைப்பு, கார்களின் செயல்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பல முக்கிய கருத்துகளையும், ஆலோசனைகளையும் நரேன் கார்த்திகேயன் கொடுத்து வருகிறார்.

டாடாவின் பெர்ஃபார்மென்ஸ் கார்கள்
இதுதவிர, அதிக செயல்திறன் மிக்க கார்களை உருவாக்கும் பணியிலும் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்திலும் நரேன் கார்த்திகேயன் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

எகிறும் எதிர்பார்ப்பு
சூப்பர் கார் மற்றும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கார் பந்தய வீரர்கள் இணைந்து பணியாற்றுவது வாடிக்கைதான். ஆனால், சாதாரண பயணிகள் கார் தயாரிப்புக்கு பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஆலோசனைகளை டாடா மோட்டார்ஸ் ஏற்றுக் கொண்டு, மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதன்மூலம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து மிகச்சிறந்த கார் மாடல்களை எதிர்பார்க்கலாம் என்பது ஆட்டோமொபைல் துறை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications








