இந்தியாவில் கார் விற்பனையை சொந்தமாக கவனிக்கப்போவதாக நிசான் அறிவிப்பு!
இந்தியாவில் கார் விற்பனைக்காக ஹோவர் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை நிசான் திடீரென ரத்து செய்துள்ளது. இனி கார்கள் விற்பனை செய்யும் பணிகளை சொந்தமாக மேற்கொள்ள இருப்பதாக நிசான் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கார் தயாரிப்பை மட்டுமே நிசான் கவனித்து வந்தது. கடந்த 6 ஆண்டுகளாக நிசான் கார்களின் விற்பனை மற்றும் டீலர்ஷிப் கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் ஹோவர் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் வசம் இருந்து வந்தது.

இந்த நிலையில், விற்பனையில் இருக்கும் குளறுபடிகளை களையும் விதமாக, கார் விற்பனையை சொந்தமாக கவனிக்கப் போவதாக நிசான் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிசான் கார் விற்பனை மட்டுமின்றி, விரைவில் டட்சன் பிராண்டு கார்களும் நிசான் கார் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளன. எனவே, இரு பிராண்டு கார்களின் விற்பனையும் சீராக அமையும் விதமாக நிசான் நிறுவனம் இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிசான் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் கென்சிரோ யோமுரா குறிப்பிடுகையில்," இந்திய வர்த்தகத்தில் முதிர்ச்சியை பெற்றுள்ளோம். எனவே, விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பணிகளை சொந்தமாக மேற்கொள்வதற்கு இதுவே சரியான சமயமாக இருக்கும்.
வழக்கம்போல் தொடர்ந்து சீரான வர்த்தகப் பணிகளை மேற்கொள்வோம். வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகளையும், சேவைகளையும் தொடர்ந்து வழங்குவோம்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








