பண்டிகை கால பட்டியலிலிருந்து ஒதுங்கிக் கொண்ட டட்சன் கோ ப்ளஸ்!!
பட்ஜெட் விலையில் புதிய கார் மாடல்களை டட்சன் பிராண்டில் நிசான் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. டட்சன் பிராண்டில் கோ ஹேட்ச்பேக் கார் நிசான் விற்பனைக்கு சற்று பக்கபலமாக இருந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, கோ ப்ளஸ் எம்பிவி கார் இந்த ஆண்டு தீபாவளியையொட்டி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டுதான் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக நிசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் கில்லாம் சிகார்டு தெரிவித்துள்ளார்.

ஏமாற்றம்
மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ, செவர்லே என்ஜாய் கார்களைவிட குறைவான விலையில் இந்த புதிய எம்பிவி காரை நிசான் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனால், பண்டிகை கால பட்டியலில் இந்த புதிய காருக்கும் இடமிருந்தது. ஆனால், தற்போது அடுத்த ஆண்டு இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக நிசான் அறிவித்துள்ளதால் காத்திருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

4 மீட்டர் எம்பிவி
இந்த கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. டட்சன் கோ கார் அடிப்படையிலான எம்பிவி காராக உருவாக்கப்பட்டிருக்கும் டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார் 3.995மிமீ நீளம், 1,635மிமீ அகலம் மற்றும் 1,485மிமீ உயர அளவுகள் கொண்டது. 2,450மிமீ வீல்பேஸ் கொண்ட மாடல் என்பதால் உட்புறத்தில் ஓரளவு நல்ல இடவசதியை வழங்கும்.

எஞ்சின்
முதலில் பெட்ரோல் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். சிறப்பான மைலேஜையும் வழங்கும் என்பதால் இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இருக்கை வசதி
5+2 இருக்கை அமைப்பை கொண்டது. அதாவது, 7 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக இருக்கும். கடைசி மூன்றாவது வரிசை இருக்கையில் 2 சிறியவர்கள் அமர்ந்து செல்லலாம். மேலும், இரண்டாவது, மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்துக் கொள்ளவும் முடியும்.

சிறப்பம்சங்கள்
மொபைல்போன் டாக்கிங் ஸ்டேஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. டேஷ்போர்டில் கியர்நாப் கொடுக்கப்பட்டிருப்பதால், முன்புற வரிசையிலும் சிறப்பான இடவசதியை அளிக்கும். ஹேட்ச்பேக் கார் விலையில் இந்த 7 சீட்டர் காரை நிலைநிறுத்த நிசான் திட்டமிட்டுள்ளது. இதனால், அதிக வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








