இந்தியாவில் புதிய பிரிமியம் எஸ்யூவியை அறிமுகப்படுத்த நிசான் திட்டம்!
இந்திய மார்க்கெட்டில் அதிக பங்களிப்பை பெறுவதற்கான திட்டங்களை செயல்படுத்த மிக தீவிரமான பணிகளை துவங்கியுள்ளது நிசான். டட்சன் பிராண்டில் புதிய பட்ஜெட் எம்பிவி காரை அறிமுகப்படுத்த இருக்கும் நிசான் நிறுவனம் விரைவில் புதிய எஸ்யூவி காரை கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க இந்தியாவுக்கான தகவமைப்புகள் கொண்டதாகவும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ரெனோ டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலான டெரானோ எஸ்யூவியை விற்பனை செய்து வருகிறது. பழைய தலைமுறை எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவி இந்தியாவில் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், புதிய மாடல் விரைவில் வருகிறது. இந்த நிலையில், பிரிமியம் அம்சங்கள் கொண்டதாக ஃபுல்சைஸ் எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது.

அடிப்படை மாடல்
சர்வதேச அளவில் புதிய நிசான் நவரா பிக்கப் டிரக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிக்கப் டிரக்கின் அடிப்படையில்தான் புதிய எஸ்யூவியை இந்தியாவுக்கு தயாரித்து களமிறக்க நிசான் முடிவு செய்துள்ளது.

எஞ்சின்
தாய்லாந்தில் உள்ள நிசான் ஆலையில் இந்த ஆண்டு இறுதியில் புதிய நவரா பிக்கப் டிரக்கின் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இந்த பிக்கப் டிரக்கில் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். எஞ்சின் பவர் உள்ளிட்ட தொழில்நுட்ப விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. முந்தைய தலைமுறை நவரா பிக்கப் டிரக்கைவிட புதிய மாடல் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும்.

டிசைன் அம்சங்கள்
புதிய நிசான் நவரா பிக்கப் டிரக்கில் எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள் உள்ளிட்ட நவீன தலைமுறை அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், எக்ஸ்ட்ரெயில், பாத்ஃபைன்டர் போன்ற நிசானின் பிரபல எஸ்யூவி மாடல்களிலிருந்து டிசைன் அம்சங்களை இந்தியாவுக்கான எஸ்யூவி மாடலிலும் பயன்படுத்த நிசான் எஞ்டினியர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த புதிய எஸ்யூவியில் சொகுசு அம்சங்களுக்கு பஞ்சமிருக்காது.

போட்டியாளர்கள்
ஃபோர்டு எண்டெவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற பிரிமியம் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இந்த புதிய நிசான் எஸ்யூவி நிலைநிறுத்தப்படும். போட்டி மாடல்களைவிட சற்று குறைவான விலையில் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவியை அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








