அதிர் வேட்டு விலையில் தீபாவளிக்கு ரிலீசாகும் டட்சன் கோ ப்ளஸ்!!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டட்சன் பிராண்டில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கோ ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு வந்துவிட்டது. அடுத்ததாக, டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி காரை அறிமுகப்படுத்தும் பணிகளை நிசான் முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில், வரும் தீபாவளி பண்டிகையையொட்டி புதிய டட்சன் கோ ப்ளஸ் காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு நிசான் திட்டமிட்டுள்ளது. மேலும், ஹேட்ச்பேக் மற்றும் காம்பெக்ட் செடான் கார்களின் மார்க்கெட்டையும் நிலைகுலைக்கும் விலையில் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடிவம்
7 பேர் செல்லும் வசதி கொண்ட இந்த எம்பிவி கார் வெறும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. 3.995 மிமீ நீளம் கொண்ட இந்த எம்பிவி கார் கோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலில் மட்டும்...
கோ ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. இது 68 பிஎச்பி ஆற்றலையும், 109 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

டீசல் மாடல் உண்டா?
பெட்ரோல் மாடலைத் தொடர்ந்து, டீசல் மாடலிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி டீசல் மாடல் வந்தால், அதில் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அது 64 பிஎச்பி ஆற்றலையும், 160 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

இடவசதி
கோ காரை போன்று இந்த காரிலும் கியர் லிவர் டேஷ்போர்டிலேயே இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால், முன் இருக்கையில் அதிக இடவசதி இருக்கும்.

வசதிகள்
ஏபிஎஸ், ஏர்பேக்குகள், சென்ட்ரல் லாக், பவர் ஸ்டீயரிங், முன்புற பவர் விண்டோ, மியூசிக் சிஸ்டம் போன்றவை இந்த காரின் சிறப்பம்சங்களாக இருக்கும்.

இருக்கை அமைப்பு
2+3+2 என்ற மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்டிருக்கும். இது 4 மீட்டருக்கும் குறைவான கார் என்பதால், பின்புற இருக்கையில் சிறியவர்கள் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும்.

சாமான்களுக்கான இடவசதி
அதிக அளவில் பொருட்களை எடுத்து செல்லும் வகையில் இதன் 2வது மற்றும் 3வது வரிசை இருக்கைகளை மடக்கிக் கொள்ளும் வசதி இருக்கும்.

உற்பத்தி செலவீனம்
கோ ஹேட்ச்பேக் காரின் பல பாகங்களை இந்த காரும் பங்கிட்டுக் கொள்வதால் உற்பத்தி செலவு மிக குறைவாக இருக்கும். இதை வைத்து பல கார் மாடல்களின் வயிற்றில் புளியை கரைக்கும் விலையில் வருகிறது டட்சன் கோ ப்ளஸ் எம்பிவி கார்.

விலை
ரூ.4.80 லட்சம் முதல் ரூ.5 லட்சத்திற்குள் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்படும் என்று தகவல்கள் கூறுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு மிக்க குறைவான விலை எம்பிவி காராக வரும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








