இன்னும் ஒரு சில போர்ஷே 918 ஸ்பைடர் கார்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன!
லாஃபெராரி, மெக்லாரன் பி1 கார்கள் லிமிடேட் எடிசனாக வெளியிடப்பட்ட அதே தருணத்தில், அதற்கு போட்டியாக போர்ஷே 918 ஸ்பைடர் காரும் லிமிடேட் எடிசனாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மூன்று மாடல்களில் ஓபன் டாப் மாடலில் வந்த ஒரே ஹைப்பர் கார் போர்ஷே 918 ஸ்பைடர்தான். லாஃபெராரி மாடலில் 499 கார்களும், மெக்லாரன் பி1 மாடலில் 375 கார்களும், போர்ஷே 918 ஸ்பைடர் மாடலில் 918 கார்களும் லிமிடேட் எடிசனாக தயாரித்து விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், லாஃபெராரி கார்களுக்கு ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது. தற்போது போர்ஷே 918 ஸ்பைடர் மாடலிலும் ஒரு சில கார்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளதாக போர்ஷே நிறுவனத்தின் வட அமெரிக்க பிரிவு துணைத் தலைவர் ஆந்த்ரே தெரிவித்துள்ளார். லாஃபெராரி, மெக்லாரான் பி1 கார்களின் விற்பனை எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பிட்டு பார்த்தால், போர்ஷே 918 ஸ்பைடர் கார் சாதித்திருக்கிறது.

ஹைபிரிட் மாடல்
இதுவும் ஒரு ஹைபிரிட் மாடல்தான். இந்த காரில் 4.6 லிட்டர் வி8 எஞ்சின் மற்றும் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக ஹைபிரிட் மோடில் 887 எச்பி பவரை அளிக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
நர்பர்க்ரிங் டிராக்கில் இந்த கார் 6:57 நிமிடங்களில் ஒரு லேப் சுற்றை நிறைவு செய்து சாதனை படைத்திருக்கிறது. மேலும், 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.7 வினாடிகளில் தொட்டும் விடும் ஆற்றல் கொண்டது. மணிக்கு 340 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டது.

உற்பத்தி துவக்கம்
கடந்த ஆண்டு செப்டம்பர் 18ந் தேதி இந்த காரின் உற்பத்தி துவங்கப்பட்டது. இந்த ஆண்டில் சில கார்கள் மட்டுமே டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பதிவு
அமெரிக்காவிலிருந்து அதிக முன்பதிவு கிடைத்துள்ளது. ரூ.1.22 கோடி முன்பணம் செலுத்தி இந்த காருக்கு முன்பதிவு செய்தால் மட்டுமே, கார் உற்பத்தி செய்து தரப்படும்.

விலை
காரின் விலை மற்றும் டெலிவிரி சார்ஜ் உள்பட ஒரு காரின் அடக்க விலை இந்திய மதிப்பில் ரூ.5.18 கோடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








