ஃபோக்ஸ்வேகன் குழுமத்துக்கு லாபத்தை தருவதில் போர்ஷே முதலிடம்: காரணம் என்ன?
உலகின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் திகழ்கிறது. மேலும், ஃபோக்ஸ்வேகனின் தலைமையின் கீழ் பல்வேறு பிரசித்தி பெற்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் அங்கம் வகிக்கும் கார் தயாரிப்பு நிறுவனங்களில் போர்ஷே பிராண்டுதான் அதிக லாபத்தை ஈட்டித் தருகிறதாம். இதைத்தொடர்ந்து, பென்ட்லீ நிறுவனம் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. ஃபோக்ஸ்வேகன் கீழ் செயல்படும் கார் நிறுவனங்களும் ஃபோக்ஸ்வேகனுக்கு எவ்வளவு லாபத்தை ஈட்டுகின்றன என்பதையும், அதற்கான காரணங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

போர்ஷே மதிப்பு
ஃபோர்ஷே விற்கும் ஒவ்வொரு காருக்கும் 23,000 டாலர் லாபமாக கிடைக்கிறதாம். இதன்மூலம், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அதிக லாபத்தை ஈட்டி தரும் துணை நிறுவனங்களில் முதன்மையானதாக திகழ்கிறது.

பென்ட்லீ
ஃபோக்ஸ்வேகன் குழுமத்திற்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் இரண்டாவது முக்கிய நிறுவனமாக பென்ட்லீ நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்ட்லீ விற்பனை செய்யும் ஒவ்வொரு காருக்கும் 20,000 டாலர் லாபம் கிடைக்கிறதாம்.

ஃபோக்ஸ்வேகன் நிலை
தனது கீழ் இயங்கும் ஆடம்பர கார் பிராண்டுகள் மூலம் சிறப்பான லாபத்தை பெற்று வரும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், தனது சொந்த பிராண்டில் விற்பனை செய்யும் ஒவ்வொரு கார் மூலமாக 850 டாலர் மட்டுமே லாபம் கிடைக்கிறதாம். இது மிக குறைவாக குறிப்பிடப்படுகிறது.

ஆடியும் குறைவு
போர்ஷேவைவிட ஆடி நிறுவனம் பல்வேறு பிளாட்ஃபார்ம்களில் கார்களை தயாரிப்பதால், உற்பத்தி செலவீனம் அதிகம் இருப்பதால், லாபத்தில் பங்காளிகளுடன் போட்டியிட முடியாமல் தவிக்கிறது.

லம்போர்கினி மதிப்பு
போர்ஷே போன்றே லம்போர்கினியும் பிராண்டு மதிப்பு அதிகம் இருக்கிறது. இருப்பினும், விற்பனை எண்ணிக்கையில் போர்ஷேவைவிட மிக குறைவாக இருக்கிறது. இதனால், ஒரு காருக்கு 5,200 டாலர் மட்டுமே லாபமாக கிடைக்கிறதாம்.

பிளாட்ஃபார்ம் பங்கீடு
போர்ஷே மற்றும் பென்ட்லீ நிறுவனங்கள் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் லாபகரமான நிறுவனங்களாக செயல்படுவதற்கு முக்கிய காரணம், கார் வடிவமைப்புக்கான பிளாட்ஃபார்ம்களை பங்கிட்டுக் கொள்வதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி செலவீனம் வெகுவாக குறைந்து, அதிக லாபத்தை பெற்று தருகின்றனவாம்.

பிராண்டு மதிப்பு
ஃபோக்ஸ்வேகன் கீழ் செயல்படும் போர்ஷே, பென்ட்லீ, ஆடி மற்றும் லம்போர்கினி உள்ளிட்ட பல நிறுவனங்கள் பிளாட்ஃபார்ம்களை பங்கிட்டு கொள்கின்றன. ஆனால், மற்ற பிராண்டுகளைவிட போர்ஷேவின் பிராண்டு மதிப்பு சிறப்பாக இருப்பதால், விலை நிர்ணயத்தில் சமரசம் இல்லை. மேலும், மதிப்புமிக்க கார் பிராண்டுகளுக்கு அதிக விலை கொடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








