ரவி பூஜாரி மிரட்டல் எதிரொலி... ரூ.10 கோடியில் புல்லட் புரூஃப் கார் வாங்கிய ஷாரூக்கான்!
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மும்பை ஜூகு பகுதியில் உள்ள பிரபல இந்தி பட தயாரிப்பாளரும், நடிகர் ஷாரூக்கானுக்கு நெருக்கமானவருமான அலி மொரானி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், மொரானியின் வீடு மற்றும் பிஎம்டபிள்யூ கார் சேதமடைந்தது. இந்த துப்பாக்கிச்சூடு ஷாரூக்கானை குறிவைத்து நடத்தப்பட்டதாக மொரானி கூறினார். இந்தநிலையில், மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரிதான் இந்த தாக்குதலில் பின்னணியில் இருப்பதாக போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.
நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை தயாரித்தவர்தான் அலி மொரானி. இந்தநிலையில், ஷாரூக்கான் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் புதிய படத்தின் வெளிநாட்டு உரிமையை ரவி பூஜாரி கேட்டதாகவும், ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஷாரூக்கான் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, புதிய குண்டு துளைக்காத காரை நடிகர் ஷாரூக்கான் வாங்கியுள்ளார். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கார் மாடல்
பென்ஸ் எஸ்600 காரை பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக மாற்றித் தரப்படுகிறது. குண்டு வெடிப்பில் சேதமடையாத பாகங்கள், குண்டு துளைக்காக கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வசதிகள்
பாதுகாப்பு வசதிகள் மட்டுமின்றி, பல்வேறு சொகுசு வசதிகளை இந்த கார் கொண்டுள்ளது. சொகுசான இருக்கைகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும்.

எஞ்சின்
இந்த காரில் 513 எச்பி பவரையும் 830 என்எம் டார்க்கையும் அளிக்கும் 5.5 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பென்ஸ் எஸ்600 மாடலில் 6.0 லிட்டர் எஞ்சினுடன் வருகிறது.

விலை
விசேஷ வசதிகளுடன் கட்டமைத்து தரப்படும் இந்த கார்தான் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த கார் மாடலாகும். ரூ.10 கோடி செலவில் இந்த காரை ஷாரூக்கான் வாங்கியிருக்கிறார்.

புதிய படம்
வரும் 24ந் தேதி ஷாரூக்கான் நடிப்பில் ஹேப்பி நியூ இயர் என்ற திரைப்படம் வெளிவருகிறது. இதற்கான, வெளிநாட்டு உரிமத்தை கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால்தான் ரவி பூஜாரி மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

பாடி பேனல்கள்
உயர்ரக கட்டமைப்பு கொண்ட இந்த காரின் வலு குறைந்த பகுதிகளில் உயர்தர மெட்டல் ஷீட் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கண்ணாடிகளில் பாலிகார்பனேட் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தை தாங்கும் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இடவசதி
இந்த புதிய மாடல் 4 அல்லது 5 பேர் பயணிக்கும் வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கும். இரு இருக்கை வசதிகளிலும் 350 லிட்டர் பூட் ரூம் வசதி கொண்டதாக இருக்கும். அவசர காலங்களில் விரைவாக சம்பவ இடத்தை விட்டு வெளியேறும் வகையில் சிறந்த பெர்ஃபார்மென்ஸ் கொண்டதோடு, மணிக்கு 210கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

ஆமீர்கான்
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கருதி, கடந்த மார்ச் மாதம் ஆமீர்கான் இதே காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், இரண்டாவதாக தற்போது ஷாரூக்கான் இந்த காரை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








