லூகா தலைமையில் வெளிவந்த டாப்- 5 ஃபெராரி கார்கள்!
ஃபெராரி நிறுவனத்தை 23 ஆண்டுகள் வழிநடத்தி வந்த லூகா டி மான்டிஸிமோலோ விலக முடிவு செய்துவிட்டார். 67 வயதான லூகா மான்டிஸிமோலோவின் தலைமையில் பல வெற்றிகரமான ஃபெராரி மாடல்கள் வெளிவந்துள்ளன.
இதில், என்ஸோ மற்றும் சமீபத்திய மாடலான லாஃபெராரி ஆகியவை முக்கிய மாடல்களாக குறிப்பிடலாம். கோபம் கொப்பளிக்கும் டிசைனும், எஞ்சினும் ஃபெராரி பிராண்டு மீதான ஈர்ப்பையும், மதிப்பையும் ஆண்டுக்கு அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், லூகா தலைமையில் வெளியிடப்பட்ட சில பிரபல ஃபெராரி கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிரபல மாடல்கள்
கடந்த 1990 முதல் தற்போது வரை லூகா தலைமையில் வெளியிடப்பட்ட மிக பிரபலமான 5 ஃபெராரி கார் மாடல்களின் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

1. ஃபெராரி 360 மோடேனா
லூகாவின் தலைமையில் வெளியிடப்பட்ட மிக வெற்றிகரமான மாடல்களில் ஒன்று. 1999ம் ஆண்டு ஃபெராரி எஃப்-355 காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது. ஃபெராரி நிறுவனர் என்ஸோவின் பிறந்த இடமான மோடேனா என்ற இடத்தின் பெயருடன் வெளியிடப்பட்டது. டிசைனில் பல முக்கிய மாற்றங்களுடன் இலகு எடை கொண்ட அலுமினியம் ஃப்ரேமுடன், அதிகசக்திவாய்ந்த எஞ்சினுடன் மார்க்கெட்டுக்கு வந்தது. இந்த காரில் 3.6 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 2005 வரை உற்பத்தியில் இருந்த இந்த காருக்கு மாற்றாக புதிய எஃப்430 மாடல் வெளியிடப்பட்டது.
Photo Credit: Wikipedia

2. ஃபெராரி எஃப்12 பெர்லினேட்டா
ஃபெராரி 599 ஜிடிபி காருக்கு மாற்றாக 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாடல் இது. இந்த காரில் 730 எச்பி பவரை அளிக்கும் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.. கடந்த ஆண்டு இந்த காரின் எஞ்சினுக்கு 2013ம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச எஞ்சின் என்ற பெருமை கிடைத்தது. இதே எஞ்சின் எஃப்எஃப் காரிலும் பயன்படுத்தப்படுகிறது.

3.ஃபெராரி 458
ஃபெராரியின் அழகான கார் மாடலாக வர்ணிக்கப்படும் இந்த கார் எஃப்430 காருக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், முன்னாள் ஃபார்முலா- ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கரின் ஆலோசனைகளின்படி இன்டிரியர் டிசைன் செய்யப்பட்டது. இந்த காரில் 4.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. லூகாவின் ஆட்சிமானத்தில் வடிவமைக்கப்பட்ட மிக அழகான காராக குறிப்பிடப்படுகிறது.

4.ஃபெராரி 456
ஃபெராரி தலைவராக லூகா பொறுப்பேற்ற ஆரம்ப காலத்தில் வெளியிடப்பட்ட மாடல் இது. 1992 முதல் 2003ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்தது. பாப்-அப் ஹெட்லைட்டுகள் கொண்ட கடைசி ஃபெராரி கார் மாடல் இது. 2000 மற்றும் 2001ம் ஆண்டுகளில் 4.0 லிட்டர் மேலான ரகத்தில் சிறந்த சர்வதேச எஞ்சினுக்கான விருதை பெற்றது. இந்த காரில் 5.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

5. லாஃபெராரி
லூகாவின் தலைமையில் வெளிவந்த கடைசி மாடல்தான் இதுதான். இதன் டிசைன் ஆட்டோமொபைல் துறையினராலும், கார் பிரியர்களாலும் சிலாகித்து பேசப்படுகிறது. இது ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் என்பதுடன் லிமிடேட் எடிசனாக தயாரிப்பில் உள்ளது. மொத்தம் 499 கார்கள் மட்டுமே விற்கப்பட உள்ளது. அனைத்து லாஃபெராரி கார்களுக்கான முன்பதிவும் முடிந்துவிட்டது. இந்த காரை விரும்புபவர்கள் இதன் விலையைவிட இருமடங்கு கொடுத்தால் வாங்க முடியும் என்ற நிலை தற்போது இருக்கிறது. இதுதான் லூகாவின் வர்த்தக சூத்திரமாகவும் இருந்தது. அதாவது, குறைந்த எண்ணிக்கையில் தயாரித்து அதன் மதிப்பை கூட்ட வேண்டும் என்பதே லூகாவின் எண்ணம்.

செட்டில்மென்ட்
லூகா டி மான்டிஸிமோலோவுக்கு 27 மில்லியன் யூரோவை செட்டில்மென்ட் தொகையாக ஃபெராரியின் தாய் நிறுவனமான ஃபியட் கிறைஸ்லர் குழுமம் வழங்க உள்ளது.


Click it and Unblock the Notifications








