குஜராஜ் ஆலையை சுஸுகிக்கு விட்டுக் கொடுத்த விவகாரம்: மாருதி முடிவுக்கு முதலீட்டாளர்கள் எதிர்ப்பு
குஜராத்தில் புதிய ஆலை அமைக்கும் இடத்தை சுஸுகி நிறுவனத்துக்கு தாரை வார்த்த மாருதியின் முடிவுக்கு, அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆனால், தனது முடிவில் மாற்றம் இல்லை என்று மாருதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதிய கார் ஆலை அமைப்பதற்காக குஜராத் மாநிலம், ஹன்சால்பூர் என்ற இடத்தில் 1,190 ஏக்கர் நிலத்தை மாருதி நிறுவனம் வாங்கியது. அந்த இடத்தில் கார் ஆலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில், புதிய ஆலை அமைக்கும் நடவடிக்கையில், திடீர் திருப்பமாக குஜராத்தில் ஆலை அமைப்பதற்கான இடத்தையும், பொறுப்பையும் தனது தாய் நிறுவனமான சுஸுகியிடம் வழங்குவதாக கடந்த மாதம் 28ந் தேதி மாருதி அறிவித்தது.
தயாரிப்பு செலவு மற்றும் ராயல்டி தொகையை கொடுத்து சுஸுகியிடமிருந்து கார்களை மாருதி கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாருதியின் இந்த திடீர் முடிவுக்கு மாருதியின் முதலீட்டாளர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும், இது தவறான முடிவு என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கார் தயாரிப்பு நிறுவனம் என்ற அந்தஸ்திலிருந்து இறங்கி, கார் விற்பனை செய்யும் டீலர்ஷிப் போன்று மாருதி மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தவிர, கார்களை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், முதலீட்டாளர்களின் எதிர்ப்புக்கு அடி பணிய போவதில்லை என்று மாருதி தெரிவித்துள்ளது.
மாருதியின் நிர்வாகம் சார்ந்த முடிவுகளில் முதலீட்டாளர்கள் தலையிடுவதற்கான உரிமை இல்லை என்று மாருதி தலைவர் ஆர்.சி.பர்கவா தெரிவித்துள்ளார்.
இதில், நாங்கள் சட்டத்திற்கு புறம்பாக முடிவு எடுத்ததாக முதலீட்டாளர்கள் கருதினால், நீதிமன்றத்துக்கு அவர்கள் செல்லலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது முதலீட்டாளர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








