புதிய கார் ஆலைக்கு வாங்கிய இடத்தை சுஸுகியிடம் தாரை வார்க்கும் மாருதி!
குஜராத்தில் கார் அமைப்பதற்காக வாங்கப்பட்ட இடத்தை தனது தாய் நிறுவனமான சுஸுகியிடம் ஒப்படைக்க உள்ளது மாருதி. இதனால், அங்கு சுஸுகி நிறுவனம் நேரடியாக கார் ஆலையை அமைக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம் உற்பத்தி திறனை உயர்த்துவதற்காக குஜராத்தில் புதிய ஆலை கட்டுவதற்கு தீர்மானித்தது. இதற்காக, 2011ம் ஆண்டு ஹன்சால்பூரில் 1,190 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசிடமிருந்து மாருதி வாங்கியது. இந்த இடத்தில் மிகப்பெரிய கார் ஆலை அமைக்க மாருதி திட்டமிட்டது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக குஜராத் ஆலை திட்டத்தை சுஸுகியிடம் ஒப்படைக்க உள்ளது மாருதி. கார் வடிவமைப்பு மற்றும் விற்பனையில் மாருதி கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் அமைய இருக்கும் சுஸுகி கார் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் முழுவதுமாக, மாருதி நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. தயாரிப்பு செலவீனம் மற்றும் ராயல்டி தொகையுடன் சேர்த்து ஆகும் உற்பத்தி செலவை கொடுத்து சுஸுகியிடமிருந்து மாருதி கார்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும். இதற்காக, இரு நிறுவனங்களுக்கு இடையில் ஒப்பந்தமும் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய கார் ஆலை அமைப்பதற்காக ரூ.3,065 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக சுஸுகி அறிவித்துள்ளது. வரும் 2017ல் இந்த புதிய கார் ஆலையில் உற்பத்தி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். படிப்படியாக இந்த ஆலையின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும்.
இதனிடையே, குஜராத்தில் புதிய கார் ஆலை அமைப்பதற்காக வாங்கப்பட்ட இடத்தை சுஸுகியிடம் கைமாறியுள்ளதாக வெளியான செய்தி மாருதி நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தேசிய பங்குச் சந்தையில் மாருதி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு வெகுவாக சரிந்தன.


Click it and Unblock the Notifications








