கிராஷ் டெஸ்ட் முடிவுகள்: வாடிக்கையாளர் உயிரை துச்சமாக கருதும் கார் நிறுவனங்கள்!
இந்தியாவில் செயல்படும் கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் உயிரை துச்சமாக மதிக்கும் விஷயம் சமீபத்திய கிராஷ் டெஸ்ட் சோதனைகள் மூலம் அம்பலமாகி வருகிறது.
தள்ளுபடியுடன் மெட்ஸிலர் டயர்களை வாங்கணுமா!
குளோபல் என்சிஏபி அமைப்பு அண்மையில் நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டட்சன் கோ கார்கள் தர மதிப்பீட்டில் பூஜ்யம் பெற்றது. இது வாடிக்கையாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டட்சன் கோ காரை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் மத்தியிலும் இந்த சோதனை முடிவுகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில், சென்னையில் நேற்று நடந்த புதிய ஆல்ட்டோ கே10 கார் அறிமுக விழாவில் மாருதி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு மூத்த அதிகாரி மனோகர் பட் கலந்து கொண்டார்.
அப்போது, கிராஷ் டெஸ்ட்டில் ஸ்விஃப்ட் கார் பூஜ்ய மதிப்பீடு கிடைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவின் அனைத்து பாதுகாப்பு தர நிர்ணய மதிப்பீடுகளுக்கு ஒப்பானதாக எங்களது கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால், இந்த கார்களை வெளிநாட்டு தர நிர்ணய மதிப்பீட்டு சோதனைகளுக்கு உட்படுத்தும்போது, அவை தேர்ச்சி பெறுவது கடினம். வெளிநாட்டு சாலை நிலைகளுக்கும், இந்திய சாலை நிலைகளுக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. இந்த கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகளை, நம் நாட்டில் தயாராகும் கார்களுடன் ஒப்பிட்டு பார்க்க இயலாது. வெளிநாட்டு தர நிர்ணய அளவுகோல் முறை நடைமுறையில் இங்கு சாத்தியமில்லை," என்று கூறினார்.
மாருதி சொல்வது போன்று ஒப்புக்கொண்டாலும், குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களில் கூட ஸ்விஃப்ட் தோல்வியடைந்திருப்பதே வாடிக்கையாளர்களின் கவலை. மேலும், டட்சன் கோ காரில் ஏர்பேக் பொருத்தினாலும், அதன் கட்டுமானம் சிறப்பான பாதுகாப்பை வழங்காது என்று குளோபல் என்சிஏபி அமைப்பு மற்றொரு குண்டையும், தூக்கி போட்டுள்ளது.
வர்த்தகத்தை பெருக்குவதில் தீவிரம் காட்டும் கார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாததும், அதற்கு சப்பைக்கட்டு கட்டும் வகையில், ரெடிமேட் பதில் ஒன்றை கூறுவதும் ஏற்க இயலாததாகவே உள்ளது. 8 லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்கும் வாடிக்கையாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உயிரை துச்சமாக கார் நிறுவனங்கள் கருதுவதையே இது எடுத்துக் காட்டுகிறது.
இன்றைக்கு இந்திய கார்களின் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகளாக கருதப்படுகின்ற ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவை டாப் வேரியண்ட் எனப்படும் காரின் விலையுயர்ந்த வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. அதேவேளை, தேவையில்லாத ஆக்சஸெரீகளை, எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் என்ற பெயரில் போட்டு வாடிக்கையாளர் தலையில் கட்டுவதற்கு கார் நிறுவனங்களும், டீலர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். வாடிக்கையாளரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவதற்கு இவர்கள் முன்னுரிமை கொடுப்பதில்லை.
ஸ்விஃப்ட், டட்சன் கோ கார்கள் மட்டுமில்லை. சில மாதங்களுக்கு முன் பல முன்னணி நிறுவனங்களின் கார் மாடல்கள் கிராஷ் டெஸ்ட்டில் பார்டரில் கூட பாஸ் செய்யவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான கார்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.
மேலும், இதுபோன்று பாதுகாப்பு குறைவான கார்களால் பலரின் உயிருக்கும் ஆபத்தை தரும் வாய்ப்பு இருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே கவனம் செலுத்தி கார் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் கடுமையான விதிகளை நடைமுறைக்கு கொண்டு வருவதே சாலை பாதுகாப்புக்கு வித்திடும் ஒரே வழியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








