எஸ்யூவி, எம்பிவி மற்றும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்கள் தயாரிப்பில் டாடா மும்முரம்
கைட் என்ற பெயரில் புதிய குட்டிக் காரை டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து வருவதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், கைட் கார் தவிர்த்து புதிய பிரிமியம் ஹேட்ச்பேக், எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களையும் டாடா மோட்டார்ஸ் வடிவமைத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இண்டிகாவை தூக்கி விட்டு கைட் காரை நிலைநிறுத்த டாடா முடிவு செய்துள்ளதாம். ஆனால், இண்டிகாவைவிட விலை குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று, புதிய பிளாட்ஃபார்மில் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் ஒன்றை டாடா உருவாக்கி வருகிறது.

இதன் அடிப்படையில் புதிய செடான் கார்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் போல்ட் காரைவிட கூடுதல் விலையில் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காரை நிலைநிறுத்த டாடா முடிவு செய்துள்ளது. விரைவில் வரும் புதிய ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் ஐ20 போன்ற கார்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும்.
2016 அல்லது 2017ம் ஆண்டுவாக்கில் இந்த புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய தலைமுறை டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. இதுதவிர, ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.
டாடாவின் புதிய யுவி பிளாட்ஃபார்மில் எம்பிவி மற்றும் புதிய எஸ்யூவி கார்கள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த எம்பிவி மற்றும் எஸ்யூவி மாடல்கள் முறையே எர்டிகா, டஸ்ட்டர் போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
புதிய எம்பிவி மற்றும் எஸ்யூவி கார்களின் கான்செப்ட் மாடல்கள் 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடல்கள் மூலம் நிலையான இடத்தை மார்க்கெட்டில் பிடிப்பதற்கு ஏதுவாகும் என்ற நம்பிக்கையுடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது டாடா மோட்டார்ஸ்.


Click it and Unblock the Notifications








