ஸெஸ்ட் காருக்கு 6 ஆண்டுகள் வாரண்டி: ஒரு முடிவோடு களமிறங்கும் டாடா!
கார் மார்க்கெட்டில் அதிகபட்ச வாரண்டி கொண்ட காராக டாடா ஸெஸ்ட் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காருக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வாரண்டியும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் வழங்க டாடா முடிவு செய்துள்ளதாம்.

இதுதவிர, முதல் மூன்று ஆண்டுகளுக்கான ஆண்டு பராமரிப்பு திட்டத்தையும் டாடா வழங்க உள்ளது. மேலும், 24 மணிநேர சாலை அவசர உதவி திட்டத்தை இலவசமாக ஸெஸ்ட் காருக்கு டாடா வழங்க உள்ளது. காரின் விலையிலேயே இதற்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டுவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் செடான் காருக்கு ஆன்லைனில் முன்பதிவு நடந்து வருகிறது. ரூ.21,000 முன்பணத்துடன் ஸெஸ்ட் காருக்கு விரும்பிய டீலரை தேர்வு செய்து ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த புதிய காரில் டாடா நிறுவனத்தின் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. டீசல் மாடலில் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாகவும் வருகிறது.
ஸெஸ்ட் காரை தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள போல்ட் ஹேட்ச்பேக் காருக்கும் இதே வாரண்டி திட்டத்தையும் டாடா வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








