அடுத்த ஆண்டு இந்தியாவில் அடியெடுத்து வைக்க தெஸ்லா திட்டம்!
உலகின் புகழ்பெற்ற அமெரிக்காவை சேர்ந்த சொகுசு எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான தெஸ்லா இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2012ல் ஐரோப்பிய மார்க்கெட்டில் தெஸ்லா கார் விற்பனையை துவங்கியது. இதைத்தொடர்ந்து, தற்போது ஆசிய மார்க்கெட்டிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கத் உள்ளது.

ஆசிய மார்க்கெட்டில் முதலாவதாக சீனாவிலும் தொடர்ந்து இந்தியாவிலும் கார் விற்பனையை துவங்குவதற்கு தெஸ்லா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து எக்கானமிக் டைம்ஸ் நாளிதழுக்கு தெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி தீபக் அகுஜா பேட்டியளித்தப்போது கூறுகையில்," இந்தியாவில் எங்களது எலக்ட்ரிக் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அடுத்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் நுழைவது பொருத்தமாக இருக்கும்.
அதேவேளை, இதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. தெஸ்லா மாடல் எஸ் தவிர்த்து, தற்போது தயாரிப்பு நிலையில் இருக்கும் மாடல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவியுடன் இந்திய மார்க்கெட்டில் நுழைந்தால் சரியானதாக இருக்கும்.
மேலும், சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டியதையும் கணக்கில் கொள்வது அவசியம். இதுவே சவாலானதாக இருக்கும். தற்போது தெஸ்லா நிறுவனம் மாடல் எஸ் என்ற ஒரே ஒரு ஸ்போர்ட்ஸ் செடான் ரகத்திலான எலக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications








