இந்தியாவில் கால் பதிக்க தெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனம் தீவிரம்!
குறைவான விலையில் புதிய எலக்ட்ரிக் கார் மாடலுடன் இந்தியாவில் கால் பதிக்கும் திட்டம் இருப்பதாக தெஸ்லா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் செடான் கார் உலக அளவில் மெச்சப்படும் எலக்ட்ரிக் கார் மாடலாக உள்ளது. ஆனால், இது சாதாரண எலக்ட்ரிக் கார் போன்று அல்லாமல் மிகச்சிறந்த செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளதால், விலை அதிகம்.

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட புதிய மார்க்கெட்டுகளில் கால் பதிப்பதற்கான முயற்சிகளை தெஸ்லா மோட்டார்ஸ் மேற்கொண்டுள்ளது. இதற்காக, தெஸ்லா மாடல் 3 என்ற புதிய எலக்ட்ரிக் கார் மாடலையும் அந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து தெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை தகவல்தொடர்பு அதிகாரி ஜெ விஜயன் கூறுகையில்," தற்போது தெஸ்லா நிறுவனம் மூன்றாம் தலைமுறை மாடலாக தெஸ்லா 3 என்ற புதிய மாடலை உருவாக்கி வருகிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்வதற்கு ஏதுவான சிறப்பம்சங்கள் கொண்ட இந்த புதிய மாடலை தெஸ்லா மாடல் எஸ் காரின் விலையைவிட பாதி விலையில், அதாவது 30,000 டாலர் முதல் 40,000 டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
சொகுசு கார் மார்க்கெட்டில் இது ஒரு முன்மாதிரி மாடலாக இருக்கும். இந்தியாவில் அதிக வர்த்தக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஏற்ற சரியான விலை கொண்ட மாடல் தேவைப்படுகிறது. ஆனால், உலகிலேயே அதிக இறக்குமதி வரிவிதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. அமெரிக்கா போன்றே இந்திய அரசும் எலக்ட்ரிக் கார்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கினால், எங்களது மாடல்களை இங்கே கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமையும்.
ஆசிய நாடுகளில் கால் பதிக்கும் திட்டத்தில் இந்தியாவும் உள்ளது. இங்கு ஆலை அமைப்பதற்கும் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கு நிலையான வர்த்தக கொள்கைகள் அவசியம்," என்றார்.
எலக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்வதற்கு சிறப்புக் கொள்கைகளை வகுப்பது குறித்தும், இறக்குமதி வரியில் சலுகை வழங்குவது குறித்தும் இந்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த தெஸ்லா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
தற்போது ஆசியாவில் சீனா மற்றும் ஜப்பான் மார்க்கெட்டுகளில் தெஸ்லா மாடல் எஸ் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








