இன்னும் 53 ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்துவிடும்: குண்டை தூக்கிப் போடும் ஆய்வு
இன்னும் 53 வருடங்களில் உலகின் மொத்த எண்ணெய் வளமும் தீ்ர்ந்துவிடும் என்று பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வு பீதியை கிளப்பியுள்ளது.
இன்றைய உலகின் இயக்கமே பெட்ரோலிய பொருட்களை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது. வாகனங்கள், சமையல் உபயோகம், மின்சார உற்பத்தி என அனைத்திலும் பெட்ரோலிய பொருட்களின் பங்கு இன்றியமையாததாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், உலகில் இன்னும் 1,687.9 பில்லியன் பேரல்கள் மட்டுமே எண்ணெய் வளம் இருப்பதாகவும், அதை வைத்து இன்னும் 53.3 வருடங்களுக்கான தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.
இது உலக நாடுகளிலேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வாகன பெருக்கத்தின் காரணமாக தேவை கூடிக் கொண்டே இருப்பதால் இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டதைவிட குறைவான காலத்திலேயே எண்ணெய் வளம் தீர்ந்து போகும் அபாயமும் இருப்பதாக கணிக்கப்படுகிறது. மேலும், பெட்ரோலிய பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரிக்கும் அபாயமும் எழுந்துள்ளது.
எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களை தயாரிப்பதில் மும்முரம் காட்டினாலும் அது எதிர்பார்த்த கட்டத்தை இன்னும் எட்டவில்லை. இந்த நிலையில், பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் ஆய்வு முடிவு மாற்று எரிபொருள் வாகனங்களை தயாரிப்புக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
மின்சாரம் அல்லது ஹைட்ரஜனில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதற்கும் மற்றும் அதற்கான கட்டமைப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்துவதன் மூலமே எதிர்வரும் அபாய நிலைமையை சமாளிக்க முடியும். இல்லையெனில், உலகத்தின் இயக்கமே நின்று போகும் நிலை ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications








