அக்டோபரில் டாப் - 10 யுட்டிலிட்டி கார்கள்... இங்கு மஹிந்திராவின் ஆதிக்கம்!
எஸ்யூவி, எம்பிவி, எம்யூவி உள்ளிட்டவை அடங்கிய பயன்பாட்டு வகை பயணிகள் வாகனப் பிரிவில் விற்பனையாகும் கார் மாடல்களுக்கு வாடிக்கையாளர்களிடம் தனி வரவேற்பு இருப்பதோடு, அந்தஸ்தை வழங்குவதாகவும் கருதுகின்றனர். இடவசதி, கிரவுண்ட் கிளியரன்ஸ், சிறந்த எஞ்சின்களுடன் வருவதால், இந்த வகை மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
சிறிய கார் மார்க்கெட்டில் மாருதி எப்படி ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதுபோன்று பயன்பாட்டு வகை பயணிகள் வாகனப் பிரிவில் மஹிந்திரா ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. கடந்த மாதம் டாப் - 10 லிஸ்ட்டில் மஹிந்திராவின் மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களால் மிகவும் அதிகம் விரும்பப்படும் பயன்பாட்டு வகை கார் பிரிவில் கடந்த மாதம் டாப் - 10 இடங்களை பிடித்த மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

டாப் - 10 பட்டியல்
பயன்பாட்டு வகை பிரிவு என்ற அடிப்படையிலேயே இந்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது.

10. டொயோட்டா ஃபார்ச்சூனர்
பிரிமியம் எஸ்யூவி வகையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கடந்த மாதம் ஒட்டுமொத்த யுட்டிலிட்டி ரக கார் பிரிவில் 10வது இடத்தை பிடித்தது. கடந்த அக்போபரில் 1,491 டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

9. நிசான் டெரானோ
பெரும் வெற்றியை பெற்ற ரெனோ டஸ்ட்டரின் ரீபேட்ஜ் மாடலாகவும், சற்று கூடுதல் பிரிமியம் அம்சங்களுடன் வந்த டெரானோ எஸ்யூவி நிசான் விற்பனையில் சற்று ஆறுதலை வழங்கி வருகிறது. கடந்த மாதம் 1,528 டெரானோ எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

8. ஹோண்டா மொபிலியோ
விற்பனைக்கு வந்தவுடன் மாருதி எர்டிகாவை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்திய ஹோண்டா மொபிலியோவின் விற்பனை திடீரென சரிந்தது. கடந்த மாதம் 2,985 ஹோண்டா மொபிலியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

7. மஹிந்திரா எக்ஸ்யூவி 500
சீரான விற்பனையை பதிவு செய்து மஹிந்திராவின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை மஹிந்திரா எக்ஸ்யூவி 500 வழங்கி வருகிது. கடந்த மாதம் 3,100 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

6. ரெனோ டஸ்ட்டர்
ரெனோ கார் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் அஸ்திவாரம் அமைத்து கொடுத்த டஸ்ட்டர் தொடர்ந்து சீரான விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதம் 3,417 டஸ்ட்டர் எஸ்யூவிகளை ரெனோ விற்பனை செய்துள்ளது.

5. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்
கடந்த மாதம் 5வது இடத்தை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவி பிடித்தது. கடந்த மாதத்தில் 4,528 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகள் விற்பனையாகியுள்ளன.

4. மாருதி எர்டிகா
ஹோண்டா மொபிலியோவின் நெருக்கடியையும் தாண்டி, கடந்த மாதம் 4வது இடத்தை பிடித்தது மாருதி எர்டிகா. கடந்த மாதத்தில் 5,025 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

3. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
சமீபத்தில் விற்பனைக்கு வந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் 5,095 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. புதிய மாடல் மஹிந்திராவுக்கு விற்பனையில் நல்லமுறையில் கொடுத்து வருகிறது.

2.டொயோட்டா இன்னோவா
புதிய கார் மாடல்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டாலும், இடவசதி, சொகுசு, சிறந்த எஞ்சின்களுடன் என அனைத்து அம்சங்களிலும் தன்னிறைவான டொயோட்டா இன்னோவா தொடர்ந்து விற்பனையிலும் முன்னிலை வகிக்கிறது. கடந்த மாதம் 5,147 டொயோட்டா இன்னோவா எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

1.மஹிந்திரா பொலிரோ
ஒட்டுமொத்த கார் விற்பனையில் டாப் - 10 இடத்தில் இருந்து வரும் மஹிந்திரா பொலிரோதான் யுட்டிலிட்டி கார் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் 9,090 பொலிரோ எஸ்யூவிகளை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இந்த செக்மென்ட்டில் பிற 9 மாடல்களைவிடவும் விற்பனையில் எட்ட முடியாத இடத்திலும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








