கிராஷ் டெஸ்ட் அச்சம்: அனைத்து கார்களிலும் ஏர்பேக்கை வழங்க டொயோட்டா முடிவு
கிராஷ் டெஸ்ட் முடிவுகளின் எதிரொலியால், தனது அனைத்து கார் மாடல்களிலும் ஏர்பேக் எனப்படும் உயிர்காக்கும் காற்றுப் பையை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்குவதற்கு டொயோட்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட் ஆய்வுகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் பல முன்னணி கார்கள் படுதோல்வியடைந்தன. ஃபோர்டு ஃபிகோ, மாருதி ஆல்ட்டோ, டாடா நானோ, ஃபோக்ஸ்வேகன் போலோ, ஹூண்டாய் ஐ10, மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டட்சன் கோ ஆகிய அனைத்து கார்களும் தோல்வியடைந்தன. இதில், டட்சன் கோ காரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும், அதன் விற்பனையை உடனடியாக இந்தியாவில் நிறுத்துமாறும் என்சிஏபி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், கிராஷ் டெஸ்ட்டில் போலோ கார் தோல்வியடைந்ததால், பதறிப்போன ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏர்பேக்கை போலோ காரில் நிரந்தர ஆக்சஸெரீயாக கொடுப்பதாக அறிவித்தது. ஏர்பேக் பொருத்தப்பட்ட போலோ கார் 5 நட்சத்திரத்துக்கு, 4 நட்சத்திரங்கள பெற்று பாஸ் ஆனது. ஆனால், பிற கார் நிறுவனங்கள் கிராஷ் டெஸ்ட் முடிவுகளை சட்டை செய்யவில்லை. அலட்சியமான பதில்களையும், சாக்குப் போக்குகளையும் கூறி வருகின்றன.
இந்த நிலையில், தற்காப்பு நடவடிக்கையாக தனது அனைத்து கார்களிலும் உயிர்காக்கும் காற்றுப்பைகளை நிரந்தர ஆக்சஸெரீயாக வழங்க டொயோட்டா கார் முடிவு செய்துள்ளது. ஒருவேளை, கிராஷ் டெஸ்ட் செய்தால் பிரச்னையாகி, பிராண்டு மதிப்பு மற்றும் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ, என்ற அச்சத்தில் இந்த முடிவை டொயோட்டா எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏர்பேக் என்றால் என்ன?
ஏர்பேக் எனப்படும் உயிர்காக்கும் காற்றுப்பைகள் கார்களின் பாதுகாப்பு வசதிகளில் மிக முக்கியமானது. வளர்ந்த நாடுகளில் விற்பனையாகும் கார்களில் உயிர்காக்கும் காற்றுப்பைகள் நிரந்தர பாதுகாப்பு ஆக்சஸெரீயாக இடம்பெற்றிருக்கிறது. விபத்து ஏற்படும்போது காருக்குள் பயணிப்போரை இந்த உயிர்காக்கும் விரிவடைந்து பாதுகாப்பை வழங்கும். இதன்மூலம், தலை மற்றும் கால், இடுப்பு உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் படுகாயங்களிலிருந்து பயணிகள் தப்பிக்க ஏதுவாகிறது.

விபத்து நிகழும்பட்சத்தில் 0.03வினாடிகளில், அதாவது கண் இமைக்கும் நேரத்தில், இந்த இந்த காற்றுப்பைகள் விரிவடையும். மேலும், ஓட்டுனருக்கான ஏர்பேக், முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக், பின் இருக்கை பயணிகளுக்கான ஏர்பேக், பக்கவாட்டில் மோதல் ஏற்பட்டால், காப்பதற்கான சைடு கர்டெயின் ஏர்பேக், கால்களை பாதுகாக்கும் Knee ஏர்பேக், எஸ்ஆர்எஸ் ஏர்பேக் என்று பல வகைகளில் வழங்கப்படுகிறது.
விலையுயர்ந்த கார்களில் எந்த திசையிலிருந்தும் மோதல் ஏற்பட்டாலும் காக்கும் வகையில், உட்புறத்தில் அனைத்து பக்கங்களிலும் ஏர்பேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாகும் கார்களின் டாப் வேரியண்ட்டில் ஓட்டுனருக்கான ஏர்பேக் நிரந்தர ஆக்சஸெரீயாக வழங்கப்படுகிறது. எஸ்ஆர்எஸ் ஏர்பேக் சிஸ்டத்தில், மோதல் வேகத்தை கணக்கிட்டு சீட் பெல்ட் சிஸ்டத்துடன் இணைந்து செயலாற்றி, ஓட்டுனர் அல்லது பயணியை காக்கும் தொழில்நுட்பம் கொண்டது.
இருக்கையில் சரியாக அமர்ந்தால்தான் ஏர்பேக் பாதுகாப்பை முழுமையாக பெற முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இல்லையெனில், ஏர்பேக் இருந்தாலும், புண்ணியமில்லாத நிலை ஏற்படலாம். ஓட்டுனருக்கான ஏர்பேக் ஸ்டீயரிங் வீலிலும், முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் டேஷ்போர்டிலும் கொடுக்கப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








