பட்ஜெட் அறிவிப்புகளால் கார், பைக் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
மத்திய பட்ஜெட்டிற்கு ஆட்டோமொபைல் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பட்ஜெட்டில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புகள் கார் உள்ளிட்ட வாகன மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு என குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஒட்டுமொத்த பட்ஜெட்டின் அம்சங்கள் வாகன மார்க்கெட்டில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்கட்டமைப்புத் துறை மற்றும் உற்பத்தி துறைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது கார் மற்றும் பைக் மார்க்கெட்டில் கூடுதல் வளர்ச்சியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவிரவும், மாதச் சம்பளதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வருமானவரி வரம்பு உயர்வு மற்றும் வீட்டுக் கடனுக்கான சலுகைகள் ஆகியவையும் வாகன மார்க்கெட்டில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, சிறிய வகை கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட உற்பத்தி வரிச் சலுகைகள் வரும் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவும் கார் மற்றும் பைக் விற்பனையில் ஏற்றத்தை கொடுக்கும் என நம்புவதாக ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் வரும் பண்டிகை காலம் மிகச்சிறப்பானதாக அமையும் என கார் நிறுவனங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








