2015ல் ரிலீசாகும் புதிய ஹேட்ச்பேக் கார்கள்: சிறப்புக் கண்ணோட்டம்
இந்திய கார் மார்க்கெட்டின் அடித்தளமாக விளங்குவது ஹேட்ச்பேக் கார்கள்தான். இந்த மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க கார் நிறுவனங்களிடையே போட்டோ போட்டி நிலவுகிறது. பட்ஜெட் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வர்த்தகத்தை நிலைநிறுத்திக் கொள்ள இந்த செக்மென்ட்டில் சிறப்பான மாடல்களை கைவசம் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது.
இதனால், இந்த செக்மென்ட்டில் மாதத்திற்கு மாதம் புதிய மாடல்களின் வரவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. புதிய மாடல்கள் தவிர, போட்டி கார்களில் அறிமுகம் செய்யப்படும் வசதிகளை சேர்த்தும், டிசைனில் மாற்றங்களை செய்தும் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஸ்பெஷல் எடிசன் மாடல்களாகவும் அவ்வப்போது அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தநிலையில், விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஹேட்ச்பேக் கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பட்டியல் விபரம்
விற்பனைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய கார் மாடல்களை மட்டும் இங்கே தொகுத்துள்ளோம்.

1.டாடா போல்ட்
அறிமுகம்: ஜனவரி 2015
எதிர்பார்க்கும் விலை: ரூ.4.80 லட்சம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்பட்ட போல்ட் கார் பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மாருதி ஸ்விஃப்ட், ஹூண்டாய் ஐ20 போன்ற கார்களுடன் இது போட்டியிடும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ஸெஸ்ட் காரின் விற்பனை சாதகமாக இல்லாததையடுத்து, போல்ட் காரின் விற்பனை 3 மாதங்களுக்கு டாடா மோட்டார்ஸ் தள்ளி வைத்துள்ளது.

2. ஹோண்டா ஜாஸ்
அறிமுகம்: பிப்ரவரி 2015
எதிர்பார்க்கும் விலை: ரூ.5.50 லட்சம்
இந்திய வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய ஹோண்டா ஜாஸ் கார் புதிய டிசைன் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 1.2லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, 1.5லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹூண்டாய் ஐ20, ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.

3.டாடா நானோ (ஏஎம்டி)
அறிமுகம்: பிப்ரவரி 2015
எதிர்பார்க்கும் விலை: ரூ.2.90 லட்சம்
டாடா நானோ காரின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்(ஏஎம்டி) என்ற ஆட்டோமேட்டிக் மாடலில் நானோ கார் வர இருக்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நானோ கார் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், இந்தியாவின் மிக குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் கார் என்ற பெருமையை பெறும்.

4. புதிய ஃபோர்டு ஃபிகோ
அறிமுகம்: ஜனவரி 2015
எதிர்பார்க்கும் விலை: ரூ.4.50 லட்சம்
பிரேசில் நாட்டில் ஃபோர்டு கா என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஃபிகோ கார் விரைவில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. முற்றிலும் புதிய டிசைனில் வரும் ஃபிகோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இன்டிரியரிலும் அதிக மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய ஃபிகோ கார் மாருதி ஸ்விஃப்ட் காருடன் நேரடியாக மோதும்.

5.டாடா கைட்
அறிமுகம்: மார்ச் 2015
எதிர்பார்க்கும் விலை: ரூ.4.25 லட்சம்
மார்க்கெட்டில் நீண்ட காலமாக இருந்து வசைகளை வாங்கி வரும் டாடா இண்டிகா காருக்கு பதிலியாக வரும் புதிய மாடல்தான் டாடா கைட். டாடா நானோ காருக்கும், டாடா போல்ட் காருக்கும் இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. தற்போது தீவிர சாலை சோதனைகளுக்கு உடப்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய கார் மாருதி செலிரியோவுடன் நேருக்கு நேர் மோதும். 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் இந்த காரிலும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்படி அறிமுகம் செய்யப்படும்போது, டீசல் மாடலில் குறைவான விலை கொண்ட ஆட்டோமேட்டிக் மாடலாக பெருமை பெறும்.
(குறிப்பு: மாதிரிக்காக டாடா நெக்ஸான் கான்செப்ட் படம் கொடுக்கப்பட்டுள்ளது.)


Click it and Unblock the Notifications








