டெல்லியில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு தடை!
டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை சாலையில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசுபடுவது குறித்து வர்த்தமான் கவுசிக் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு செய்தார். இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வந்தர்குமார் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.

இதன் முடிவில் பல அதிரடி முடிவுகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டிருக்கிறது. அதில், காற்று மாசுபடுவதற்கு காரணமாக கருதப்படும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை டெல்லியில் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது.
15 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்களின் பதிவுச் சான்றை புதுப்பிக்கக் கூடாது என்று ஆர்டிஓ., அலுவலங்களை அறிவுறுத்தியுள்ளது.
ரூ.340 விலையில் பைக்அன்ட்வியர் கையுறைகள்!
மேலும், பொது இடங்களில் அல்லது சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் பழைய வாகனங்களை பறிமுதல் செய்யவும், அல்லது அதுபோன்று நிறுத்தும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் போக்குவரத்து போலீசாரை அறிவுறுத்தியுள்ளது.
அதிக பாரம் ஏற்றிச் செல்லும் டிரக் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. காற்று மாசுபடுதலுக்கு காரணமான பழைய வாகனங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தீர்ப்பாயம் உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதற்காக, இணைய தளம் ஒன்றையும் துவங்கப்பட உள்ளது. அதில், பழைய வாகனங்களின் புகைப்படங்களை புகார்தாரர் பதிவேற்றம் செய்து புகார் அளிக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள வணிகப் பகுதிகளில் காற்று சுத்திகரிப்பு சாதனங்களை நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிரடி உத்தரவால் டெல்லியில் 10 லட்சம் வாகனங்கள் இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, டாக்ஸி ஓட்டுனர்களுக்கும், வர்த்தக வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், பெருகி வரும் வாகனங்களால் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபடுவதை இந்த உத்தரவு வெகுவாக குறைக்கும் என பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








