அமேஸ், டிசையருக்கு போட்டியாக வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் செடான்!
இந்தியாவில் புதிய காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் காம்பேக்ட் செடான் கார்களுக்கான வரவேற்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸ்சென்ட், டாடா ஸெஸ்ட் என அனைத்து காம்பேக்ட் செடான் கார்களும் சிறப்பான வரவேற்பை பெற்று கலக்கி வருகின்றன.

இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் புதிய காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பாரிஸ் மோட்டார் ஷோவில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் உயரதிகாரி, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பேக்ட் செடான் காரை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், அது இந்திய மார்க்கெட்டை மனதில் வைத்து உருவாக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் போலோ ஹேட்ச்பேக் கார் வடிவமைக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகனின் PQ25 பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட உள்ளதாகவும், போலோ காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த புதிய காம்பேக்ட் செடான் கார் வென்ட்டோ காரை விட குறைவான விலையில் வர இருப்பதால், இந்திய வாடிக்கையாளர்களிடையே பெரும் ஆவல் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








