அந்தஸ்தை விட்டு இறங்கிய ஃபோக்ஸ்வேகன்... பட்ஜெட் காரை களமிறக்குகிறது!
மாருதி, ஹூண்டாய், ஹோண்டா நிறுவனங்களின் ஆதிக்கத்தால் இந்திய மார்க்கெட்டில் சுருண்டு போய் கிடக்கும் ஃபோக்ஸ்வேகன் புதிய கொள்கை திட்டங்களுடன் எழுச்சி பெற முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்களை கவரும் விதத்திலும், அதிகம் விற்பனையாகும் கார் செக்மென்ட்டிலும் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபோக்ஸ்வேகனின் இந்தியப் பிரிவு தலைவர் மகேஷ் கொடுமுடி தெரிவித்துள்ளார். அது என்னென்ன மாடல்கள் என்பதை ஸ்லைடரில் காணலாம்.

3 புதிய மாடல்கள்
பட்ஜெட் விலையில் ஒரு புதிய என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் கார், இரண்டாவதாக ஒரு புதிய காம்பேக்ட் செடான் கார் மற்றும் புதிய மினி எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மகேஷ் கொடுமுடி தெரிவித்துள்ளார். இந்த புதிய கார்கள் குறித்து இந்த ஆண்டு இறுதியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றும் கூறினார்.

புதிய குட்டிக் கார்
தற்போது விற்பனையில் இருந்து வரும் போலோ காரினால் பிரயோஜனில்லை என்று சூசகம் தெரிவித்த மகேஷ் கொடுமுடி, புதிய என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

புதிய காம்பேக்ட் செடான்
வென்ட்டோ காரும் வேஸ்ட் என்ற நிலையிலான விற்பனையை பதிவு செய்து வருகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய காம்பேக்ட் செடான் காரையும் கொண்டு வர இருப்பதாக கூறியுள்ளார்.

மினி எஸ்யூவி
புதிய மினி எஸ்யூவியையும் களமிறக்க உள்ளதாக மகேஷ் கொடுமுடி கூறினார். கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டைகுன் காம்பேக்ட் எஸ்யூவிதான் இந்தியாவில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு உதிரிபாகங்கள்
புதிய கார்களுக்கு முடிந்தவரை உள்நாட்டிலேயே உதிரிபாகங்களை சப்ளை பெற்று தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் மகேஷ் கொடுமுடி கூறியுள்ளார். இதன்மூலம், உற்பத்தி செலவீனத்தை கட்டுபடுத்துவதோடு, போட்டியாளர்களுக்கு இணையாக தங்களது தயாரிப்புகளையும் சந்தைப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








