45 பேரின் உயிரை பறித்த வால்வோ பஸ் தீப்பிடித்ததற்கு தவறான டிசைன்தான் காரணம்!!
ஆந்திர மாநிலத்தில் 45 பேரின் உயிரை காவு வாங்கிய வால்வோ பஸ் தீ விபத்துக்கு, அதன் தவறான வடிவமைப்பே முக்கிய காரணம் என்று ஆந்திர குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தவறான டிசைன் காரணமாக வால்வோ பஸ்கள் சாலையில் இயக்குவதற்கான மதிப்பற்றவை என்றும், அவற்றின் சேவையை உடனடியாக நிறுத்துமாறும் அம்மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரபரப்பு விசாரணை அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பிளாஸ்டிக் டேங்க்
முதன்மை மற்றும் சார்பு டீசல் டேங்குகள் பிளாஸ்டிக்கால் ஆனது. முன்புற டயர்களுக்கு இடையில் அவை பொருத்தப்பட்டிருக்கின்றன. தவிரவும், தரையுடன் குறைந்த இடவெளியில் அவை அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், பேட்டரிக்கு மிக அருகில் இருக்கிறது. இதுவே, வால்வோ பஸ்கள் எளிதாக தீப்பிடிப்பதற்கு ஏதுவாக அமைகின்றன.

நடந்தது எப்படி?
பஸ் தடுப்பு ஒன்றில் மோதியதுடன், சாலையோரம் இருந்த இரும்புக் குழாய் ஒன்று மோதிய வேகத்தில் டீசல் டேங்கையும், பஸ்சின் தரைப்பகுதியையும் துளைத்துக் கொண்டு மேலே வந்துள்ளது. அதன் வழியாக டீசல் பஸ்சில் வேகமாக பரவியுள்ளது. அந்த இரும்பு குழாய் பேட்டரியிலும் உராய்ந்ததால், தீப்பொறி ஏற்பட்டு டீசல் டேங்கில் பட்டதால், தீப்பிடித்துள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளரின் பேராசை
அனுமதிக்கப்பட்டதை விட, பஸ்சின் அவசர கால வழிகளை மறைத்து கூடுதலாக 5 இருக்கைகளை ஜப்பார் டிராவல்ஸ் நிறுவனம் பொருத்தியிருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால்தான், பயணிகள் எளிதாக வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டுவிட்டனர். இதுவும் உயிரிழப்பு அதிகமானதற்கு ஒரு முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிவிசி இன்டிரியர்
பஸ்சின் இன்டிரியரில் அதிகளவில் பிவிசி பயன்படுத்தப்பட்டிருந்ததும், தீ வேகமாக பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர காரணங்கள்
ஓட்டுனரின் கவனக்குறைவும், தவறான சாலை அமைப்பும் பிற காரணங்களாக ஆந்திர குற்றப் புலனாய்வுப் போலீசாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை
இதுதொடர்பாக, விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஆந்திர குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிக்கையில், வால்வோ நிறுவனமும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்வோ மறுப்பு
பஸ்சின் தவறான டிசைன்தான் தீப்பிடித்தற்கான காரணம் என்ற ஆந்திர குற்றப்புலனாய்வுத் துறையின் குற்றச்சாட்டை வால்வோ நிறுவனம் மறுத்துள்ளது. இந்திய வாகன தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டு முறைகளுக்கு உட்பட்டு,பஸ்களை தயாரிப்பதாக வால்வோ தெரிவித்துள்ளது. இதுபோன்ற விபத்துக்களை வெளிக்காரணிகள்தான் முக்கிய காரணம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், போலீசாரின் விசாரணைக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

வால்வோவுக்கு நெருக்கடி
ஆந்திர குற்றப் புலனாய்வு துறை போலீசாரின் அறிக்கை வால்வோ நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பென்ஸ், ஸ்கானியா உள்ளிட்ட பிற போட்டியாளர்களின் நெருக்கடி ஒருபுறம் இருக்க பஸ்சின் டிசைனில் பல தவறுகள் இருப்பதாக வெளியானத் தகவலால் அந்த நிறுவனத்துக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








