இந்த ஆண்டு ரிலீஸ் பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 10 கார்கள்!
புத்தாண்டின் முதல் காலாண்டை சில புதிய மாடல்களுடன் புயல் வேகத்தில் கடந்துவிட்டது. அந்த ஆண்டு இதுவரை வந்த மாடல்களில் சுவாரஸ்யம் மிக்கதாக ஒன்றும் கூற முடியவில்லை.
இந்தநிலையில், இந்த ஆண்டில் ரிலீஸ் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் புதிய கார் மாடல்களில், அதிகம் எதிர்பார்க்கப்படும் டாப் 10 கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. டாடா கைட்
புதிய டிசைன் கொள்கையில் அசத்தலான இரு மாடல்களை வழங்கியிருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து அடுத்து அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய கார் மாடல் டாடா கைட். ரூ.4 லட்சம் விலைப் பட்டியலில் நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த புதிய டாடா கார் குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த கார் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஹேட்ச்பேக் கார் டாடா இன்டிகா வி2 காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த ஹேட்ச்பேக் மாடலின் அடிப்படையிலான காம்பேக்ட் செடான் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதும் கூடுதல் தகவல்.
[குறிப்பு: மாதிரி படம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.]

02. புதிய ஹோண்டா ஜாஸ்
வரும் ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் காரும் வாடிக்கையாளர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மட்டுமின்றி, இந்த கார் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் வருவது கூடுதல் சிறப்பு. பிரிமியம் ஹேட்ச்பேக் கார் மாடலை விரும்புவோர்க்கும் மிகச்சரியான தேர்வாக இருக்கும். இந்த ஹேட்ச்பேக் கார் 390 லிட்டர் பூட்ரூம் கொண்டதாக இருக்கும். ரூ.4.75 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03. டிசி அவந்தி
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையுடன் விரைவில் மார்க்கெட்டுக்கு வருகிறது டிசி அவந்தி. நாளை மறுதினம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த காரின் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. 250 பிஎச்பி பவரை அளிக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.

04. ஃபியட் அபார்த் 500
ஃபியட் நிறுவனத்திடமிருந்து இந்தியர்களை அதிக எதிர்பார்ப்புக்கு ஆளாக்கியிருக்கும் மாடல். இது ஃபியட் நிறுவனத்தின் அபார்த் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டிலிருந்து இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் முதல் மற்றும் பிரியம் மாடல். 135 பிஎச்பி பவரை அளிக்கும் சக்திவாய்ந்த 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. எஸ்ஸெஸ் என்ற இதன் டாப் மாடலில் இருக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 161 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். பெர்ஃபார்மெந்ஸ் விரும்பிகளை மையப்படுத்தி விற்பனை செய்யப்படும். இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என்பதால் ரூ. 25 லட்சத்தையொட்டிய விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

05. ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர்
ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த காம்பேக்ட் செடான் கார் நிச்சயம் தற்போதுள்ள முன்னணி மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும். இந்த காரில் 1.2 லிட்டர் பெடரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும். வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

06. புதிய ஃபோர்டு ஃபிகோ
டிசைன், வசதிகளில் மாறியிருக்கும் புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் அல்லது ஆஸ்பயர் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் புதிய ஃபிகோ கார் வர இருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட டிசைனில் வரும் இந்த புதிய ஃபிகோ கார் ரூ.4.7 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பரில் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07. டாடா நானோ ஏஎம்டி
கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நானோ காரின் ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. க்ளட்ச் பெடல் இல்லாமல் வரும் இந்தியாவின் குறைந்த விலை ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் உடைய மாடல் என்பதால் இதன் மீது பெண் வாடிக்கையாளர்களும், நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற காரை விரும்புபவர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது. ரூ.3 லட்சம் விலையில், வரும் செப்டம்பரில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

08. ஹூண்டாய் ஐஎக்ஸ்25
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து வரும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி, டிசைன் விரும்பிகளை பெரிதும் காத்திருக்க செய்துள்ளது. மிக நேர்த்தியான டிசைனுடன் வரும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் டஸ்ட்டருக்கும், ஈக்கோஸ்போர்ட்டும் நேரடி போட்டியை கொடுக்கும். 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வருகிறது. இந்த எஸ்யூவி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் வர இருக்கிறது. ரூ.7.5 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

09. மாருதி எஸ் க்ராஸ் எஸ்யூவி
மஹிந்திரா எக்ஸ்யூவி 500 உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியை தர வல்ல எஸ் க்ராஸ் என்ற புதிய க்ராஸ்ஓவர் மாடலை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி. இந்த க்ராஸ்ஓவர் மாடல் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட மாடல்களில் வருகிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10. மாருதி செலிரியோ டீசல்
அனைவரின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் செலிரியோ டீசல் மாடல் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மாருதியின் புதிய 800சிசி டீசல் எஞ்சினுடன் வர இருக்கும் செலிரியோ டீசல் லிட்டருக்கு 30 கிமீ.,க்கு மேல் மைலேஜ் தரும் என்று வெளியானத் தகவல்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ரூ. 5 லட்சம் ஆரம்ப விலையில் இதன் டீசல் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதமே அறிமுகம் செய்யப்படலாம் என்ற தகவலும் உலவுகிறது.

இதர மாடல்கள்
புதிய மாடல்கள் தவிர்த்து சில மேம்படுத்தப்பட்ட மாடல்களும் வருகை தர உள்ளன. அதில், டாடா சஃபாரி ஸ்ட்ராம் ஃபேஸ்லிஃப்ட், மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட், ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் உள்ளிட்ட மாடல்கள் அடங்கும். மாருதியின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வந்தால் கூட, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் விரைவில் வரும் ஹோண்டா ஜாஸ் மீதுதான் வாடிக்கையாளர்களின் கவனம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications








