புதிய நிசான் ஸ்வே கான்செப்ட்.. புதிய மைக்ராவிற்கான அடித்தளமான மாடல்!
ஜெனீவா மோட்டார் ஷோவில் ஸ்வே என்ற புதிய கார் கான்செப்ட்டை நிசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் அடிப்படையில்தான் புதிய தலைமுறை மைக்ரா கார் உருவாக இருப்பது என்பதால், இந்த கார் மீது அனைவரின் கவனம் திரும்பியிருக்கிறது.
மிக அட்டகாசமான டிசைன் தாத்பரியத்தில் உருவாகி இருக்கும் இந்த புதிய கார் கான்செப்ட் பற்றிய கூடுதல் தகவல்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

புதிய மைக்ரா
அடுத்த ஆண்டு புதிய மைக்ரா காரை அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டிருக்கிறது. இந்த புதிய ஸ்வே கான்செப்ட்டிலிருந்து பல டிசைன் தாத்பரியங்களை எடுத்து புதிய மைக்ராவில் பயன்படுத்த நிசான் திட்டமிட்டிருக்கிறது.

ஐரோப்பிய டிசைன்
ஹூண்டாய் நிறுவனம் எலைட் ஐ20 காரை ஐரோப்பிய டிசைன் மையத்தில் வடிவமைத்ததல்லவா. அதேபோன்றே, நிசான் நிறுவனமும் இந்த புதிய மைக்ரா காரை ஐரோப்பாவில் டிசைன் செய்ய உள்ளது. எனவே, நிசான் மைக்ரா முற்றிலும் வேறுபட்ட டிசைனில் வெளிவரும் என்ற ஆவல் பிறந்திருக்கிறது.

டிசைன்
பம்பருடன் இணைந்த V- Motion முன்பக்க க்ரில் அமைப்பு, அதிக நளினங்களுடன் விளையாடி இருக்கும் பாடி லைன்கள் என அசத்தலாக இருக்கிறது நிசான் ஸ்வே கான்செப்ட் மாடல். ஹெட்லைட் மிக கவர்ச்சியான ஒன்றாக இருக்கிறது.

பின்புற வடிவமைப்பு
பூமராங் வடிவ டெயில் லைட்டுகளும் காருக்கு அம்சமாக இருக்கிறது என்று சொல்ல வைக்கிறது. அத்துடன் பம்பரில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு புகைப்போக்கி குழாய்களும் சரிவக அமைப்பை பெற்றிருக்கின்றன. அலாய் வீல் டிசைனும் இந்த கான்செப்ட் மீது மட்டுமின்றி, புதிய மைக்ராவின் வரவை ஆவலோடு எதிர்நோக்க வைக்கிறது.

போட்டியாளர்
இந்த டிசைன் தாத்பரியத்தின் அடிப்படையில் புதிய நிசான் மைக்ரா வடிவமைக்கப்பட்டு வந்தால், அது நிச்சயம் ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நேர் போட்டியாக இருக்கும். மாருதி ஸ்விஃப்ட்டை மறக்க நினைப்பவர்களுக்கு சரியான மாற்றாகவும் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








