மின்சார கார்கள் உற்பத்திக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு: மற்றபடி ஒண்ணுமில்லை!
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறையினர் எதிர்பார்த்த சலுகைகள் பற்றிய அறிவிப்புகள் ஒன்று கூட இல்லை. இதனால், கார் நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2015- 16ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு அளவிலான பொது பட்ஜெட் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையினருக்கு வரிச்சலுகைகள் அல்லது குஷியை ஏற்படுத்தும் அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, பெரிய அளவில் மகிழ்ச்சி தரும் செய்தி எதுவும் இல்லை. மேலும், கார் நிறுவனங்கள் வைத்த கோரிக்கைகள் ஒன்று கூட பரிசீலிக்கப்படவில்லை.
தற்போது சரக்கு மற்றும் சேவை வரி(GST) மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இதற்கு மாற்றாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரியை விதிக்கும் நடைமுறையை விரைவாக அமல்படுத்த கார் நிறுவனங்கள் வலியுறுத்தியிருந்தன. ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த வரி விதி முறையை அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது கார் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
மேலும், கடந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கார்கள் மீதான வரிக்குறைப்பு சலுகை கடந்த மாதம் நீக்கப்பட்டது. இதனால், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விலை வெகுவாக அதிகரித்தது. இந்த நிலையில், உற்பத்தி வரிச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று கார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பும் பொது பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இது கார் நிறுவனங்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இருப்பினும், கார்களுக்கான உற்பத்தி வரியை உயர்த்தாமல் விட்டதே பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.. இவைகள் தவிர்த்து, கார்களுக்கான வட்டி வீதத்தை குறைக்குமாறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை கேட்டுக்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு கார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த கோரிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை.
ஆட்டோமொபைல் துறைக்காக ஒரே ஒரு அறிவிப்பை மட்டுமே மத்திய பொது பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ரூ.75 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்வதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார கார்கள் தயாரிப்புக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றே ஆறுதலான விஷயம்.


Click it and Unblock the Notifications








