ஹெலிகாப்டர் தயாரிப்புக்காக மஹிந்திரா, டாடாவிடம் ஏர்பஸ் பேச்சுவார்த்தை!
ராணுவ ஹெலிகாப்டர் தயாரிப்புக்காக மஹிந்திரா, டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏர்பஸ் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வாகன நிறுவனங்கள் அலைமோதி வரும் நிலையில், விமான தயாரிப்பில் உலக புகழ்பெற்ற ஏர்பஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தயாரிப்பு பிரிவு இந்திய சந்தையில் களமிறக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ராணுவ ஹெலிகாப்டர்கள்
இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் சீட்டா மற்ரும் சேடக் ஹெலிகாப்டர்கள் தொழில்நுட்பத்திலும், டிசைனிலும் மிகவும் பழமையானதாக மாறிவிட்டன. இதற்கு மாற்று மாடல்கள் விரைவில் வாங்கப்படும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டர் மாடல்கள்
சீட்டா மற்றும் சேடக் உள்ளிட்ட மாடல்களுக்கு மாற்றாக தனது ஏஎஸ்550 பென்னக் மற்றும் இசி725 ஆகிய ஹெலிகாப்டர் மாடல்களை தயாரித்து வழங்க ஏர்பஸ் ஹெலிகாப்டர் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

கூட்டணி
இந்திய பாதுகாப்பு துறை வழிகாட்டு முறைகளின்படி, அன்னிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தே ராணுவ தளவாடங்களை தயாரிக்க முடியும் என்பதால், டாடா, மஹிந்திரா, ரிலையன்ஸ் குழுமங்களுடன் ஏர்பஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதர நிறுவனங்கள்
ஏர்பஸ் ஹெலிகாப்டர் நிறுவனம் மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த சிகோர்ஸ்கை மற்றும் ரஷ்ய நாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் ஹெலிகாப்டர் தயாரிப்பில் ஈடுபட முயன்று வருகின்றன.

ஏர்பஸ் ஆதங்கம்
பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட துறைகளில் 49 சதவீதம் அளவுக்கே அன்னிய நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியும். ஆனால், கூடுதல் முதலீடு செய்யும்படி விதிகள் இருந்தால், இந்தியாவில் நேரடியாக புதிய ஆலை அமைக்கும் பணிகளை விரைவாக செய்ய வழிவகை இருக்கும் என்று ஏர்பஸ் ஹெலிகாப்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தனியாருக்கு முக்கியத்துவம்
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைக்க ஏர்பஸ் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாறாக, இந்தியாவின் தனியார் நிறுவனங்களுடன் கூட்டணி வைக்க ஏர்பஸ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

விமான தயாரிப்பில் அனுபவம்
சிறிய விமான தயாரிப்பில் மஹிந்திரா குழுமத்துக்கு அனுபவம் இருக்கிறது. இதேபோன்று, டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் டிஏஎல் மேனுஃபேக்சரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் விமான எஞ்சின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இரு நிறுவனங்களுக்கும் ஏற்கனவே விமான தயாரிப்பு துறையில் அனுபவம் இருப்பதால், ஏர்பஸ் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் கூட்டணி அமைப்பதற்காக இந்த இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








