நேபாள நிவாரணப் பணிகளுக்கு நேசக்கரம் நீட்டிய கார் நிறுவனங்கள்!!
இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட, நேபாளத்திற்கு பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் உதவி வருகின்றன. அங்கு நடைபெற்று வரும் மீட்புப்பணிகளுக்காக வாகன தயாரிப்பு நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
சில நிறுவனங்கள் வாகனங்களை கொடுத்து உதவி வருவதோடு, நன்கொடையும் அளித்து வருகின்றன. நேபாளத்திற்கு கார் நிறுவனங்களின் அளித்து வரும் உதவி அந்நாட்டு மக்களின் துயர் துடைக்க உதவும் வகையில் அமைந்திருக்கிறது.

01. ஹூண்டாய் மோட்டார்ஸ்
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக மறு புனரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக ரூ.1.91 கோடியை வழங்கியுள்ளது. தவிர, நிலநடுக்கத்தில் சேதமடைந்த கார்களை சர்வீஸ் செய்து தருவதற்கான பணிகளையும் மேற்கொண்டிருக்கிறது.

02. நிசான்
நேபாள துயரத்திற்காக நிசான் நிறுவனம் 53.60 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் மூலமாக இந்த நன்கொடை நேபாள மக்களுக்கு செல்கிறது. உணவு, தண்ணீர் போன்றவற்றிற்கு இந்த நன்கொடை பயன்படுத்தப்படுகிறது.

03. மஹிந்திரா
இந்தியாவின் மிகப்பெரிய வாகன குழுமங்களில் ஒன்றான மஹிந்திரா நிறுவனம் மறு சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக அங்குள்ள தனது டீலர்கள் வழியாக டிராக்டர் மற்றும் பிக்கப் டிரக் வாகனங்களை அளித்துள்ளது.

04. ஃபோர்டு
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் நேபாளத் துயரத்திற்காக தனது பணியாளர்களின் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பாக சேர்த்து ரூ.1.26 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது.

05. ஜெனரல் மோட்டார்ஸ்
மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் வாகன குழுமம் ரூ.63 லட்சத்தை நன்கொடையாக அளித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க செஞ்சிலுவை சங்கம் வாயிலாக இந்த நன்கொடை நேபாளத் துயரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

06. டொயோட்டா
ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா ரூ.53.60 லட்சத்தை நேபாளத்தின் மீட்புப் பணிகளுக்காக அளித்துள்ளது.

07. ஹோண்டா
ஜப்பானை சேர்ந்த ஹோண்டா கார் நிறுவனம் ரூ.1.06 கோடியை நேபாளத்தின் துயர் துடைப்பு பணிகளுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளது.

08. யமஹா
ஜப்பானை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா ரூ.26 லட்சத்தை நேபாளத்தின் மீட்புப் பணிகளுக்காக வழங்கியுள்ளது.

09. ஜேசிபி
ஜேசிபி நிறுவனம் ரூ.6.3 கோடியை நேபாள துயர் துடைப்பு பணிகளுக்காக வழங்கியுள்ளது. மேலும், பொக்லைன் எந்திரங்களையும் மீட்புப் பணிகளுக்காக வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








