சென்னை வெள்ளத்தில் 12,000 கார்கள் பாதிப்பு: சரிசெய்யும் பணிகள் தீவிரம்
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் 12,000 கார்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக முதல்கட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை சரிசெய்யும் பணிகளை முழு வீச்சில் செய்து தருவதற்கு கார் நிறுவனங்களும், அதன் டீலர்களும் தயாராகி வருகின்றன. இதற்காக, கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்தவும் கார் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன.
காரில் சேதமடைந்த பாகங்களுக்கு தள்ளுபடி வழங்கவும், லேபர் கட்டணத்தில் சலுகை வழங்கவும் கார் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன. மேலும், இன்ஸ்யூரன்ஸ் மூலம் இழப்பீடு கோருவதற்கான நடைமுறைகளும் துரித கதியில் நடந்து வருகின்றன.
பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்கள் எளிதாக இன்ஸ்யூரன்ஸ் இழப்பீடு கோரும் விதத்தில், விதிகளில் தளர்வு செய்யவும் காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கிடைத்திருக்கும் புள்ளிவிபரங்களின்படி, 4,000 மாருதி கார்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், 6,000 மாருதி கார்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவதாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் சர்வீஸ் பிரிவு செயல் இயக்குனர் பங்கஜ் நருலா தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட கார்களின் சேதத்தின் அடிப்படையில், முன்னுரிமை அளித்து சர்வீஸ் செய்து தர முடிவு செய்துள்ளதாகவும், சில சர்வீஸ் மையங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருப்பதால், அதனை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் ஒருபுறம் நடந்து வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பிற நகரங்களிலிருந்து 150 மெக்கானிக்குகள் மற்றும் சர்வீஸ் பொறியாளர்களை சென்னைக்கு வரவழைத்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. மேலும், உதிரிபாகங்கள் சப்ளையர்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, உதிரிபாக தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால், உடனடியாக சர்வீஸ் பணிகளை மேற்கொள்வதில் தடங்கல் நீடிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
நாட்டின் மற்றொரு பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கார்களை சர்வீஸ் செய்து தரும் பணியை துவங்கியிருக்கிறது. மழை வெள்ளத்தில் 3,300 ஹூண்டாய் கார்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக முதல்கட்டமாக எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையிலுள்ள ஹூண்டாய் ஆலையை சேர்ந்த பணியாளர்களை சர்வீஸ் மையங்களில் பணியில் ஈடுபடுத்தி, கார்களை விரைவாக சர்வீஸ் செய்து தருவதற்கான முயற்சியை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான ரிப்பேர் செலவீனத்தை குறைக்கும் விதத்தில், உதிரிபாகங்கள், லேபர் கட்டணம் மற்றும் பரிசோதனைகளில் தள்ளுபடி வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும், சென்னையில் 1,200 ஹோண்டா கார்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில், 500 கார்கள் சர்வீஸ் மையங்களுக்கு வந்துவிட்டன. அதில், 200 கார்கள் சரிசெய்து கொடுக்கப்பட்டுவிட்டன.
இந்த நிலையில், கார் நிறுவனங்கள் தள்ளுபடிகள், சலுகைகளை வழங்கினால் கூட பாதிப்புக்கு தக்கவாறு ரூ.8,000 முதல் ரூ.20,000 வரை வாடிக்கையாளர்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, கார்களின் தகுதியை சோதிக்கும் விதத்தில், சென்னையில் பல பகுதிகளில் சிறப்பு பரிசோதனை முகாம்களை நடத்தவும் கார் நிறுவனங்கள் திட்டமிட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications