சென்னையை புரட்டிப் போட்ட வெள்ளம்... வாகன துறையில் மட்டும் ரூ.1,500 கோடி இழப்பு!

Written By:

மழை வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் சென்னையில் வாகன உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒருவார காலமாக நிலவி வரும் சூழலில், உற்பத்தி பாதிப்பு காரணமாக ரூ.1,500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் டெட்ராய்ட் என்று பெருமையுடன் அழைக்கப்படும், சென்னையில் ஹூண்டாய், ஃபோர்டு, பிஎம்டபிள்யூ, ஐஷர், யமஹா, ரெனோ- நிசான் உள்பட பல முன்னணி கார் நிறுவனங்கள் ஆலைகள் அமைந்துள்ளன. இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.

கார் உற்பத்தி
 

இந்த நிலையில், கனமழையின் கோரத்தாண்டவத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகள் வெள்ளக்காடாக மாறியிருக்கின்றன. வீடுகள், சாலைகள் தண்ணீரில் மூழ்கின. இந்த சூழலில் சென்னையிலுள்ள பல கார் நிறுவன ஆலைகளில் உற்பத்தி முற்றிலும் முடங்கியிருக்கிறது. கார் நிறுவன தொழிலாளர்கள் பலரின் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியிருப்பதால், அவர்களும் பணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஹூண்டாய், ஃபோர்டு கார் நிறுவனங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளன. நாளை முதல் மீண்டும் உற்பத்தியை துவங்க திட்டமிட்டிருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், நிலைமையை பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

இதுபோன்று, ரெனோ- நிசான், ஃபோர்டு, ஐஷர் உள்பட்ட பெரும்பாலான நிறுவன ஆலைகளில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வருகையில் சிக்கல் நீடிப்பதால், உற்பத்தி துவங்குவதற்கு சில நாட்கள் பிடிக்கும் என்று தெரிகிறது. மேலும், எப்போது உற்பத்தியை துவங்குவது என்று கார் நிறுவனங்களே அனுமானிக்க முடியாத நிலையும் உள்ளது.

உற்பத்தி ஸ்தம்பித்திருப்பதால், சென்னையில் வாகன துறையில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.172 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால், உற்பத்தி செய்து யார்டில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை டீலர்களுக்கு அனுப்புவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

சென்னை துறைமுகம் வழியாக கார்கள் ஏற்றுமதியும் ஸ்தம்பித்துள்ளது. உற்பத்தி துவங்குவதில் நீடிக்கும் நடைமுறை சிக்கல்களால் வாடிக்கையாளர்களுக்கு குறித்த காலத்தில் கார்களை டெலிவிரி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கும், ரெனோ க்விட் காருக்கும் 70,000க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருக்கின்றன.

ஆனால், இந்த இரண்டு கார்களும் சென்னையிலுள்ள ஆலைகளில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், தற்போது உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், இந்த இரு கார்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரிகக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், பெரும் எதிர்பார்ப்போடு முன்பதிவு செய்து காத்திருந்த வாடிக்கையாளர்கள் தற்போது ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆட்டோமொபைல் துறைக்கு இது புதிய அனுபவமல்ல. கடந்த 2011ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால், டொயோட்டா, ஹோண்டா உள்ளிட்ட பல முன்னணி கார் நிறுவனங்களின் கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதே ஆண்டு தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், ஹோண்டா உள்ளிட்ட கார் நிறுவனங்களின் கார் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது நினைவுக்கூறத்தக்கது.

English summary
Chennai auto manufacturing hub suffers loss of over Rs 1,500 crore this week.
Story first published: Friday, December 4, 2015, 14:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark