நகரங்களுக்கு இடையிலான கார் பகிர்மான சேவை: ப்ளாப்ளா துவங்குகிறது!
முக்கிய நகரங்களுக்கு இடையில் கார் பகிர்மான சேவையை வழங்கும் ஐரோப்பிய நிறுவனமான ப்ளாப்ளா இந்தியாவில் கால் பதித்துள்ளது.
ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு தனியாக காரில் செல்லும் உரிமையாளர்கள், கட்டணத்துடன் தன்னுடன் இதர பயணிகளையும் அழைத்து செல்வதற்கு ஏதுவான வசதியை ப்ளாப்ளா நிறுவனம் வழங்குகிறது.

உதாரணமாக, சென்னையிலிருந்து வார இறுதியில் பெங்களூர் செல்லும் கார் உரிமையாளர், அதேநாளில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு பயணிக்க விரும்புபவர்களை குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு அழைத்து செல்லலாம்.
திடீர் பயணத் திட்டத்துடன் செல்பவர்கள் அல்லது தனியாக செல்பவர்கள் ரயில், பஸ்களில் இடம் கிடைக்காமல் அல்லாடுவதை தவிர்க்க முடியும். இந்த சேவைக்காக காரின் உரிமையாளர், தன்னுடன் பயணிக்க விரும்புபவர்களிடம் குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதனால், எரிபொருள் செலவில் குறிப்பிட்ட அளவு உரிமையாளர் சேமிக்க முடியும்.
இந்த சேவைக்கு கார் உரிமையாளர் நிர்ணயிக்கும் கட்டணத்தில் 10 சதவீதம் சேவைக்கட்டணமாக ப்ளாப்ளா நிறுவனம் பெற்றுக்கொள்ளும். இது கார் உரிமையாளருக்கு மட்டுமின்றி, உடன் செல்லும் பயணிகளிடமும் கட்டணம் பெறப்படும்.
ஆன்லைன் மூலமாக கார் உரிமையாளர்கள் தங்களது பயணத்திட்டத்தை தெரிவித்தால், அதேநாள், குறிப்பிட்ட நேரத்தில் அந்த காரில் செல்ல விரும்புபவர்கள் அந்த காரில் செல்ல வழிவகை கிடைக்கும். மேலும், கார் உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயம் செய்து தெரிவிக்கலாம்.
முதல்கட்டமாக டெல்லி, குர்கான் நகரங்களில் தனது கார் பகிர்மான சேவையை ப்ளாப்ளா துவங்க இருக்கிறது. இதர முக்கிய நகரங்களிலும் இந்த சேவையை விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








